Published : 15 Oct 2017 05:27 PM
Last Updated : 15 Oct 2017 05:27 PM

டெங்குவில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

டெங்குவில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஸ்டாலின் நேற்று ஈடுபட்டார். எம்எல்ஏ அலுவலகம் உட்பட பல இடங்களில் திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தொண்டர் ஒருவரின் இருசச்கர வாகனத்தில் பயணித்த ஸ்டாலின், தொகுதியின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள், குப்பைகள் அகற்றும் பணிகளை பார்வையிட்டார். டெங்கு காய்ச்சல் குறித்தும் அது பரவாமல் தடுப்பது குறித்தும் விளக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், செயல்படாத அதிமுக அரசு டெங்குவில் இருந்து மக்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்துள்ளார். டெங்கு பாதிப்புகளை கண்டறிய வந்துள்ள மத்திய குழுவினர், டெங்கு பரவுவதற்கு அரசு காரணமல்ல. பொதுமக்கள்தான் டெங்கு வராமல் கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது 40 பேர் பலியாகி இருப்பதை கொச்சைப்படுத்தும் வகையிலும் மத்தியக் குழுவினர் பேசியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

புதுக்கோட்டையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், என்னைப் பற்றி நயவஞ்சக நாக்கு, பயங்கரமான ஆயுதம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். கட்சி விழாவில் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். அதுபற்றி கவலையில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது கடமைகளை செய்து வருகிறேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த ரூ.89 கோடி பணப் பட்டுவாடா வழக்கில் அமைச்சரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.

தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக என்னை நியமிக்கத் தயார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு வேடிக்கையாக இருக்கிறது. பிரதமர் மோடி இப்போதுதான் தூய்மை இந்தியா பற்றி பேசுகிறார். ஆனால், 1996-ல் சென்னை மாநகர மேயராக இருந்தபோதே சிங்கார சென்னை என்ற திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினேன். இதுபற்றியெல்லாம் தமிழிசை தெரிந்துகொள்ள வேண்டும்.

வரும் டிசம்பருக்குள் முதல்வர் பழனிசாமி அரசு கவிழ்ந்து தேர்தல் வரும் என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை டிசம்பர் மாதம்கூட அதிகம்தான். இன்றோ, நாளையோ கூட ஆட்சி கவிழலாம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x