Published : 15 Oct 2017 10:08 AM
Last Updated : 15 Oct 2017 10:08 AM

திருச்சி அருகே தலைமலையில் கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையை அடுத்த அஞ்சலம் அருகே தலைமலையில் உள்ள 3 ஆயிரம் அடி உயரத்தில் பெருமாள் கோயிலைச் சுற்றி கிரிவலம் சென்ற ஆட்டோ ஓட்டுநர் தவறி விழுந்தார். அவர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

தலைமலை காப்புக்காட்டில் சுமார் 3,200 அடி உயரத்தில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் உள்ளது. இது, தலைமலை பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு திருச்சி மாவட்டம் நீலியாம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் செவந்திப்பட்டி, பவுத்திரம் ஆகிய அடிவார கிராமங்களில் இருந்து செல்லலாம். ஆனால், சரியான பாதையோ, படிக்கட்டுகளோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தொழில் சிறக்கவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறு கிடைக்கவும், வேலை வேண்டியும், குடும்ப செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்ள சனிக்கிழமைகளில் பக்தர்கள் இந்த மலைக்கோயிலுக்கு செல்வார்கள். குறிப்பாக, புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள், மலை உச்சியில் உள்ள பெருமாள் கோயிலின் வெளிப்புறச் சுவரைப் பிடித்தபடி உள்ளங்கை அகலத்தில் உள்ள கட்டுமானத்தில் நடந்துசென்று கிரிவலம் சென்று வேண்டிக் கொள்வது வழக்கம். இக்கோயிலின் மேலே இருந்து கீழே பார்த்தாலே மயக்கம் வந்துவிடும் என்று பலரும் கூறுவர். எனினும் இந்தப் பகுதியை ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சுற்றிவருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை இளைஞர் ஒருவர் கிரிவலம் சென்றபோது கால்இடறி மலை உச்சியில் இருந்து சுமார் 3,200 அடி பள்ளத்தில் விழுந்தார். அப்போது பக்தர்களில் ஒருவர் எடுத்த வாட்ஸ் அப் வீடியோ மூலம் இந்தத் தகவல் பரவியது.

இந்தக் கோயிலுக்கு திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வதால் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

கதறி அழுத மனைவி

இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் நீலியாம்பட்டிக்கு வந்த முசிறி அரசு மருத்துவமனை பகுதியைச் சேர்ந்த தாரா(36) என்பவர், வாட்ஸ் அப் வீடியோவைப் பார்த்ததாகவும், மலை உச்சியில் இருந்து தவறி விழுந்தவர் தனது கணவரான ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம்(38) எனவும் கூறி கதறி அழுதார்.

வேண்டுதலுக்காக புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி குணசீலம் பெருமாள் கோயிலுக்கு தாராவும், தலைமலை கோயிலுக்கு ஆறுமுகமும் வந்தது தெரியவந்தது. இந்த வாட்ஸ் அப் வீடியோவைப் பார்த்த அவரது உறவினர் ஒருவர் தகவல் தெரிவித்ததை அடுத்தே, இதுகுறித்து தாராவுக்கு தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி போலீஸில் புகார் அளிப்பதற்காக சஞ்சீவிராய பெருமாள் கோயில் நிர்வாகிகளுடன் தாரா சென்றார்.

இதனிடையே, நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் ஆறுமுகத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடர்ந்த மரங்கள், இறங்கிச் சென்று தேட முடியாத நிலையில் உள்ள பள்ளங்கள் இருப்பதால், ஹெலிகாப்டர் உதவியுடன் மட்டுமே தேடுதல் பணியை துரிதப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x