Published : 14 Oct 2017 08:51 AM
Last Updated : 14 Oct 2017 08:51 AM

டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து சென்னை மருத்துவமனைகளில் மத்திய குழு ஆய்வு: அலட்சியம் கூடாது என எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் அறிவுறுத்தல்

தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவக் குழுவினர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தினர். அவர்கள் இன்று சேலத்தில் ஆய்வு நடத்துகின்றனர். டெங்கு காய்ச்சல் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று எய்ம்ஸ் பேராசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து மத்திய வல்லுநர் குழு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. இந்தக் குழுவில் எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் ஆசுதோஷ் பிஸ்வாஸ், தேசிய தொற்றுநோய் தடுப்புத் திட்ட இணை இயக்குநர் டாக்டர் கல்பனா புரா, திட்ட ஆலோசகர் டாக்டர் கவுஷல்குமார், கேஎஸ்சிஎச் மற்றும் எல்எச்எம்சி மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் டாக்டர் சுவாதி டப்ளிஷ், தேசிய நோய் தடுப்பு மைய இணை இயக்குநர் வினய் கார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆய்வுக் கூட்டம்

முன்னதாக மத்தியக் குழுவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய குழுவினருடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நில நிர்வாக ஆணையர் மோகன் பியாரே, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மிந்தர் சிங், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், டிபிஎச் இயக்குநர் க.குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ.256 கோடி தேவை

கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியபோது, ‘‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து துறைகளும் இணைந்து தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த 3 மாதங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்தியக் குழுவிடம் விளக்கப்பட்டது. தமிழகத்துக்கு கூடுதலாக ரூ.256 கோடியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

மத்திய குழுவினர் 3 நாட்கள் தமிழகத்தில் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர். தேவைப்பட்டால் கூடுதலாக சில நாட்கள் இருப்பார்கள்’’ என்றார்

பாராட்டும்.. அறிவுரையும்..

எய்ம்ஸ் மருத்துவமனை பொது மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் ஆசுதோஷ் பிஸ்வாஸ் கூறியதாவது: தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு, சிகிச்சையில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், சில அம்சங்களில் தீவிர கவனம் செலுத்தத் தவறிவிட்டனர்.

டெங்குவை ஒழிப்பது அரசின் கைகளில் மட்டுமல்லாது, பொதுமக்களின் கைகளிலும் உள்ளது. சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை நீண்ட நாட்களுக்கு பாத்திரங்களில் சேமித்து வைத்துப் புழங்குவதை தவிர்க்க வேண்டும். நோய் தீவிரமடையும் வரை அலட்சியமாக இருக்கக் கூடாது. தாமதமாக மருத்துவமனைக்குச் செல்வது, சிகிச்சை எடுக்காமல் இருப்பது, தனியார் மருத்துவமனைகள் தாமதமாக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பது போன்றவைதான் உயிரிழப்புகளுக்கு காரணம்.

நிலவேம்பு குடிநீர்

நிலவேம்பு குடிநீரின் மருத்துவ குணம் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் சில பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. சிலருக்கு அது பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், முறையாக அங்கீகரிக்கப்படாத எந்த மருந்தையும் நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம். தமிழகத்தைப் பொறுத்தவரை நல்ல விழிப்புணர்வு உள்ளது. டெங்கு தடுப்பு, மேலாண்மை நடவடிக்கைகளுக்கு, ஆய்வு செய்து அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்வதைத் தீர்மானிப்போம். இவ்வறு அவர் கூறினார்.

சேலத்தில் இன்று ஆய்வு

ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து, சென்னை அரசு பொது மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள், பெரியவர்களைப் பார்த்தனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து 2 குழுக்களாகப் பிரிந்து ஆய்வைத் தொடர்ந்தனர். ஒரு குழுவினர் வளசரவாக்கம் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தி, அப்பகுதியில் எடுக்கப்பட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தனர். மற்றொரு குழுவினர் போரூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்துவிட்டு சேலம் புறப்பட்டனர். அவர்களுடன் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர். டெங்கு பாதிப்பு குறித்து சேலத்தில் இன்று ஆய்வு செய் கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x