Published : 13 Oct 2017 09:43 AM
Last Updated : 13 Oct 2017 09:43 AM

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்கொலை வழக்கில் 3-வது நபர் கைது

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக மேலும் ஒரு நபரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (36). இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தார். கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி துடியலூர் அருகே மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு துடியலூர் போலீஸாரிடமிருந்து, சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சாய்பாபா காலனியைச் சேர்ந்த சதாம்உசேன், முபாரக் என்ற இரு நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு போலீஸார் தேடி வந்தனர். இருவரைப் பற்றிய தகவல் கொடுப்போருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

இதனிடையே அபுதாஹிர் என்பவரை கைது செய்து விசாரித்த சிபிசிஐடி போலீஸார், ஆக.1-ல், தலைமறைவாக இருந்த சதாம்உசேனையும் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் முபாரக் மற்றும் மேலும் இருவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அதன் அடிப்படையில் கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபையர் (33) என்பவரையும் வழக்கில் கொண்டுவந்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கோவை அருகே அவரைக் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். நேற்று அவரை, பலத்த பாதுகாப்புடன் கோவை தலைமை நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அக்.26 வரை சுபையரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுபையரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள சுபையர், கோவை தெற்கு உக்கடம் பகுதியில் தோல் பொருட்கள் தயாரிப்பு வேலை செய்து வருகிறார். சசிகுமார் கொலையில் இவருக்கு தொடர்பு இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் தேடி வந்ததாகவும், பாலக்காட்டில் பதுங்கியிருந்த இவர், குடும்பத்தை சந்திக்க வந்தபோது கைது செய்ததாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு, விசாரணை என்ற பெயரில் போலீஸார், சுபையரை அழைத்துச் சென்றதாக கூறி அவரது குடும்பத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x