Published : 13 Oct 2017 09:39 AM
Last Updated : 13 Oct 2017 09:39 AM

வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு கொசு வராது: அமைச்சர் செல்லூர் ராஜூ யோசனை

‘வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள், டெங்கு கொசு வரவே வராது’ என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ யோசனை தெரிவித்துள்ளார்.

மதுரை சோலையழகுபுரத்தில் நேற்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் ஆகியோருடன் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுவை ஒழிக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது வீடுகளில் மூடப்படாத பாத்திரங்கள், குடங்களில் சேகரித்து வைத்த தண்ணீரை அப்புறப்படுத்த சொன்ன அமைச்சர், ‘முன்பெல்லாம் வீட்டு முற்றத்தில் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து தெளித்ததால் எந்த கொசுவும் வரல. அதுபோல நீங்களும் வீட்டு முற்றத்தில் சாணத்தை தெளியுங்கள், எந்த கொசுவும் வராது. டெங்குவும் வராது’ என்றார். டெங்கு கொசுவை ஒழிக்க அமைச்சரின் இந்த யோசனையை கேட்ட பொதுமக்கள் அதை பின்பற்றுவதாக உறுதியளித்தனர்.

அதன்பின் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘டெங்கு என்பது சாதாரண கட்டுப்படுத்த கூடிய நோய்தான். யாரும் அச்சப்பட வேண்டியதில்லை.

நம்முடைய கவனக் குறைவால்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. காய்ச்சல் வந்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ, அரசு மருத்துவமனைக்கோ உடனடியாக செல்ல வேண்டும். காலம் தாழ்த்தி மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x