Published : 10 Oct 2017 06:46 AM
Last Updated : 10 Oct 2017 06:46 AM

நாகை மீனவர்களை தாக்கியதாக இந்திய கடலோர காவல் படையினர் மீது புகார்

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் இருந்த தமிழக மீனவர்களின் படகுகளில் முதல் கட்டமாக 44 படகுகளை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. இதையடுத்து ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 2 கட்டங்களாக இலங்கைக்குச் சென்று 10 படகுகளை எடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள் காரைக்காலில் இருந்து 3 படகுகளில் இலங்கைக்கு சென்றனர். இவர்களை இந்திய கடலோர காவல் படையினர் அழைத்துச் சென்றனர்.

கோடியக்கரையில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சென்றபோது, மீனவர்களின் படகுகளில் ஒன்று பழுதாகிவிட்டது. அந்தப் படகைச் சரிசெய்துகொண்டு புறப்படத் தயாரானபோது, காலதாமதமாகிவிட்டதால் மண்டபத்துக்குச் செல்லுமாறு மீனவர்களிடம் இந்திய கடலோர காவல்படையினர் கூறியதாகவும், படகில் டீசல் குறைவாக உள்ளதாகக் கூறி அதற்கு மீனவர்கள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எழுந்த வாக்குவாதத்தின்போது, மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் தாக்கியதாகத் தெரிகிறது. பின்பு இலங்கைக்குச் சென்று படகுகளை மீட்டுக் கொண்டு வரும்போதும் இந்தியக் கடலோர காவல் படையினர் மீனவர்கள் சிலரின் ஆடைகளைக் களைந்து சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மீனவர்கள் நேற்று நாகை துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களில் செந்தில்குமார், சண்முகநாதன், சுகுமார் ஆகிய 3 பேர் நாகை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x