Published : 10 Oct 2017 06:30 AM
Last Updated : 10 Oct 2017 06:30 AM

மூன்றாவது நாளான நேற்று மருத்துவமனையில் கணவர், உறவினர்களுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார் சசிகலா

குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் கணவர் மற்றும் தன் உறவினர்களுடன், சசிகலா 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

பரோலில் வந்து மூன்றாவது நாளான நேற்று காலை வீட்டில் இருந்த சசிகலாவைப் பார்க்க இளவரசியின் மகள் விவேக், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் வந்தனர். கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. விட்டுக்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். காலை 10.50 மணி அளவில் கணவர் நடராஜனைப் பார்க்க வீட்டில் இருந்து காரில் சசிகலா குளோபல் மருத்துவ மனைக்குப் புறப்பட்டார். அவருடன் இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, மகன் விவேக் மற்றும் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோரும் சென்றனர்.

தி.நகர் வீடு, கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோயில், தரமணி டைடல் பார்க், சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2005-ம் எண் அறை

மருத்துவமனைக்கு பகல் 12 மணிக்கு வந்த சசிகலா மற்றும் உறவினர்கள் நேராக தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 2005-ம் எண் கொண்ட அறைக்குச் சென்றனர். அங்கு உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், பாஸ்கரன் ஆகியோர் இருந்தனர். அறையில் உறவினர்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா 12.45 மணிக்கு கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று நடராஜனை சந்தித்தார்.

1.30 மணி வரை நடராஜனுடன் பேசினார். செயற்கை சுவாசத்துக்காக கழுத்துப் பகுதியில் ‘டிரக்யாஸ்டமி’ கருவி பொருத்தப்பட்டிருந்ததால் சசிகலா பேசுவதைக் கேட்டு சைகை மூலமாகவும், பேப்பரில் எழுதிக் காண்பித்தும் நடராஜன் பதில் அளித்தார். அதன்பின்னர் 2005-ம் எண் கொண்ட அறைக்கு வந்த சசிகலா உறவினர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு மருத்துவமனையில் இருந்து காரில் சசிகலா வீட்டுக்கு புறப்பட்டார். 3.50 மணிக்கு சசிகலா வீட்டுக்கு வந்தார். கடந்த 2 நாட்களாக மருத்துவமனைக்கு வரும் சசிகலா 2 மணி நேரத்துக்குள் புறப்பட்டுவிடுவார். ஆனால் நேற்று வழக்கத்தைவிட மருத்துவமனையில் 3 மணி நேரம் தங்கி கணவர் மற்றும் உறவினர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார்.

உளவுத்துறை கண்காணிப்பு

முதல்நாள் மருத்துவமனைக்கு வந்த சசிகலாவுடன் உறவினர்கள், ஆதரவு எம்பிக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். சசிகலா தங்கியுள்ள வீடு மற்றும் மருத்துவமனையை உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதனால் அவரது ஆதரவு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர். உறவினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x