Published : 10 Oct 2017 05:50 AM
Last Updated : 10 Oct 2017 05:50 AM

அஞ்சல்துறை சார்பில் சென்னை-கோவை இடையே சரக்கு வாகன சேவை தொடக்கம்: வீட்டு உபயோகப் பொருட்களைப் பார்சலாக அனுப்பலாம்

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சார்பில் வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டு செல்ல உதவும் வகையில் சென்னை-கோவை இடையே சரக்கு வாகன சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சேவையைத் தொடங்கிவைத்து முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் (தமிழ்நாடு வட்டம்) எம்.சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஞ்சல்துறை சார்பில் தனிநபர்கள் 35 கிலோ வரை எடையுள்ள பொருட்களை மட்டுமே அனுப்பும் வசதி இருந்து வந்தது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அதிக எடையுள்ள பொருட்களையும் கொண்டு செல்லும் வகையில் சரக்கு வாகன சேவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தச் சேவையின்கீழ் பல்வேறு நிறுவனங்களின் பொருட்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு வந்தன.

இந்நிலையில், தனிநபர்களும் இந்தச் சேவையின்கீழ் பயன்பெறும் வகையில், தற்போது சென்னை-கோவை இடையே சரக்கு வாகன சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பயன்படுத்தி மக்கள் தங்களின் வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களைப் பார்சலாக அனுப்ப முடியும். தனிநபர் ஒருவர் தனது வீட்டை காலி செய்யும்போது பொருட்களை வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லவும் இந்தச் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த வாகன சேவையின் மூலம் சென்னை-கோவை, கோவை-சென்னை ஆகிய இரு மார்க்கங்களிலும் பொருட்களைப் பார்சலாக அனுப்பலாம். மேலும், அந்த மார்க்கத்தில் உள்ள செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், சேலம், பவானி, அவினாசி உள்ளிட்ட இடங்களுக்கும் பொருட்களை அனுப்ப முடியும். இந்தச் சேவையைப் பயன்படுத்த 15 கிலோவுக்கு குறையாமல் பொருட்கள் இருக்க வேண்டும். அவ்வாறு பொருட்களை அனுப்ப விரும்புவோர் முன்பதிவு செய்யவும், கட்டண விவரங்களை அறிந்துகொள்ளவும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களைத் தொடர்புகொள்ளலாம். இதேபோன்ற சேவையை சென்னை-மதுரை, சென்னை-பெங்களூரு இடையையும் விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளோம் என்று முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் (தமிழ்நாடு வட்டம்) எம்.சம்பத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x