Published : 07 Oct 2017 03:20 PM
Last Updated : 07 Oct 2017 03:20 PM

விளைநிலப்பகுதிகளின் வழியாக கெயில் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது: வாசன்

விளைநிலப்பகுதிகளின் வழியாக கெயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கேரள மாநிலத்திலிருந்து தமிழகம் வழியாக பெங்களூருக்கு குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்வதற்கு கெயில் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் சுமார் 310 கி.மீ. தூரத்திற்கு சுமார் 200 கிராமங்களில் உள்ள விளைநிலங்களின் வழியாக குழாய் பதிக்கப்படும் என தெரிகிறது.

இக்குழாய் பதிக்கப்படும் பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, தென்னை, மா, பலா, தக்காளி, பூக்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை பயிரிட முடியாமல் போகின்ற சூழலே ஏற்படும். மேலும் விளைநிலப் பகுதிகளில் குழாய் பதித்து, எரிவாயு கொண்டு சென்றால் குழாய் பதிக்கப்படும் விளைநிலப்பகுதிகள் குறிப்பாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் விளைச்சல் பாதித்து, விளைநிலங்கள் பாழாகும். இத்தகைய பாதிப்பால் அப்பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு மறைமுகமாக பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும். இதனால் கெயில் எரிவாயு திட்டத்தை விளைநிலங்கள் வழியாக செல்வதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே விளைநிலங்களின் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்த நினைத்தால் விவசாயம் சீர்குலையும் என்பதை மத்திய அரசு உணர்ந்து அதற்கேற்ப இத்திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாகவோ, ரயில்பாதை ஓரமாகவோ செயல்படுத்தலாம் என விவசாயிகள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே தமிழகத்தில் மழையின்மை, வறட்சி, இயற்கைச் சீற்றம், கடும் மழை, வெள்ளம் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயத்தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மாவட்டம் - மீத்தேன் திட்டம், நெடுவாசல் - ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் - ஓஎன்ஜிசி திட்டம் ஆகியவற்றை விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகின்ற சூழலில் மீண்டும் கெயில் குழாய் எரிவாயு திட்டத்தை திணிக்க முயற்சிப்பது மத்திய அரசின் தேவையற்ற நடவடிக்கையாகும். எனவே தமிழக விவசாயிகள் என்ன கூறுகிறார்களோ அதனை ஏற்று செயல்பட மத்திய அரசு முன்வர வேண்டும்.

தற்போது பாரத பிரதமர் இத்திட்டம் குறித்து விவசாயிகள் மத்தியில் உள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. காரணம் ஏற்கெனவே இத்திட்டம் தொடர்பாக விவசாயிகள் அவர்களின் எதிர்ப்பை பல முறை தெரிவித்துள்ளனர். மீண்டும் இத்திட்டம் தொடர்பான பணிகளை விரைவுபடுத்த சொல்வதும், விளக்கம் அளிக்க சொல்வதும் இத்திட்டத்தை தமிழகத்தில் திணிக்க முயற்சிக்கும் நடவடிக்கையாகும்.

எனவே கெயில் குழாய் எரிவாயு திட்டத்தை தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கட்டாயப்படுத்த எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என பாரத பிரதமருக்கு தமாகா வலியுறுத்துகிறது.

ஏற்கெனவே இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்ததை தற்போதைய தமிழக அரசு கவனத்தில் கொண்டு இத்திட்டத்தை விளைநிலப்பகுதிகளின் வழியாக செயல்படுத்த ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது'' என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x