Published : 05 Oct 2017 10:40 AM
Last Updated : 05 Oct 2017 10:40 AM

நோய் முற்றிய பிறகே அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்: தனியார் மருத்துவமனைகள் மீது டீன் குற்றச்சாட்டு - தூத்துக்குடியில் டெங்கு தாக்கம் குறைந்துள்ளதாக விளக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பெருமளவில் குறைந்துள்ளது என, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பி.சாந்தகுமார் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதாரத் துறை மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, நோய் முற்றிய நிலையில் தாமதமாக வந்ததால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சாதாரண காய்ச்சல் என தொடர்ந்து சிகிச்சை அளிக்கின்றனர். நோய் முற்றி அவர்கள் அதிக அவஸ்தை படும் நேரத்தில் தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் தான் நோயாளிகளை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

தனி வார்டுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் கடந்த மாதம் வரை 1,317 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டு அனைவரும் குணமடைந்துள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்றைய தேதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 7 பேர் மட்டுமே டெங்கு அறிகுறிகளுடன் உள்ளனர். அவர்களும் நல்ல நிலையில் இருக்கின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டுகள், போதுமான படுக்கை வசதிகள், மாத்திரை, மருந்துகள் உள்ளன. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்படுகிறது.

டெங்கு தடுப்பு தினம்

இன்று (வியாழக்கிழமை) டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் காலை பிரார்த்தனை முடிந்ததும் மருத்துவர்கள் சென்று டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசவுள்ளனர். இதேபோல் வாரம்தோறும் வியாழக்கிழமை டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும்.

பொதுமக்கள் வாரத்தில் ஒரு நாளாவது தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சுத்தம் செய்து, தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

133 பேருக்கு சிகிச்சை

மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கே.லதா,

துணை இயக்குநர் எம்.கீதாராணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவ அலுவலர் ஜெயபாண்டியன், குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் அருணாச்சலம், துணை இயக்குநர் (காசநோய்) சுந்தரலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x