Published : 04 Oct 2017 11:40 AM
Last Updated : 04 Oct 2017 11:40 AM

மணப்பாறை மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதமானதால் மனைவியின் சடலத்தை எடுத்துச் செல்ல 6 மணிநேரம் காத்திருந்த கணவர்

மணப்பாறை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் இறந்த பெண்ணின் சடலத்தை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வர தாமதமானதால் 6 மணிநேரம் காத்திருந்து அப்பெண்ணின் கணவர் சடலத்தை எடுத்து சென்றுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அயன் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மதியழகன். கொத்தனார். இவரது மனைவி சின்னப்பொண்ணு(40) கடந்த 10 நாட்களாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் சின்னப்பொண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சின்னப்பொண்ணு இறந்து 6 மணி நேரம் காத்திருந்தும் சடலத்தை எடுத்துச் செல்ல மருத்துவமனையின் அமரர் ஊர்தி வரவில்லையாம். இதனால், சடலத்தை தாங்களே எடுத்துச் செல்ல அனுமதிக்க, அங்கு பணியில் இருந்த செவிலியர்களிடம் மதியழகன் அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால், செவிலியர்கள் அனுமதிக்வில்லையாம். எனவே, சின்னப்பொண்ணுவின் உடலை மதியழகனும் அவரது மகனும் தாங்களே சுமந்து செல்ல முடிவு செய்துள்ளனர். அதற்கடுத்தே அமரர் ஊர்தி வந்துள்ளது.

இந்நிலையில், அமரர் ஊர்தியில் ஏற்றுவதற்காக சின்னப்பொண்ணுவின் சடலத்தை தூக்கிச் செல்லவும் மருத்துவமனை ஊழியர்கள் முன்வரவில்லையாம். இதையடுத்து, மதியழகனும், அவரது மகனும் வெறும் கைகளால் அப்பெண்ணின் சடலத்தை தூக்கி வந்து, ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

சின்னப்பொண்ணு வைரஸ் காய்ச்சல் தாக்கி இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறினாலும், டெங்கு காய்ச்சலால் அவர் இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x