Published : 03 Oct 2017 10:45 AM
Last Updated : 03 Oct 2017 10:45 AM

சில்வர் ஓக் மரங்களை வெட்டி கொள்ளையடிக்க முயற்சி: அமைச்சர்கள் மீது மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் சில்வர் ஓக் மரங்களை வெட்டி கொள்ளையடிக்க முயற்சிப்பதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தங்கி இருக்கும் அவர், நேற்று காலை குன்னூர் சிம்ஸ் பூங்காவை கண்டுகளித்தார். பின்னர் உதகை தாவரவியல் பூங்காவுக்கு வந்தார். ஆனால், மழை காரணமாக பூங்காவில் உள்ள புல்தரை சகதி நிறைந்திருந்ததால், பூங்கா அலுவலகத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் குன்னூர் திரும்பிவிட்டார்.

குன்னூர் டான்டீ தொழிலாளர்களை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முறையாக டெண்டர் விடப்படாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும் சிண்டிகேட் அமைத்து, சில்வர் ஓக் மரங்களை வெட்டி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன். இதுகுறித்து, சட்டப்பேரவையில் திமுக சார்பில் பிரச்சினை எழுப்பப்பட்டது. அதன்பின், தற்காலிகமாக இத்திட்டம் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதிமுக அரசின் பல்வேறு அறிவிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை வைத்திருக்கிறோம்.

கடந்த ஜூலை 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், காலம் கடந்து இப்போது திறந்திருப்பதால் எந்தவித பலனும் இல்லை.

பொறுப்பு ஆளுநர் இருந்தபோது என்ன கோரிக்கையை வலியுறுத்தினோமோ, அதையே இப்போதும் வலியுறுத்துகிறோம். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நாளை (அக்.4) கிடைக்கும் தீர்ப்பைப் பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்.

நடிகர்கள் ரஜினியும், கமலும் எம்ஜிஆர் - சிவாஜி போல என்று, அமைச்சர் ஜெயக்குமார் ஒப்பிட்டிருக்கிறார். அதே ஜெயக்குமார், ஓரிரு தினங்களுக்கு முன்பு, அவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் அனைத்து விஷயத்திலும் மாற்றி, மாற்றி பேசுகிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x