Published : 01 Oct 2017 10:18 AM
Last Updated : 01 Oct 2017 10:18 AM

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் சிதைந்த நிலையில் சமணர் சிலை கண்டெடுப்பு: வரலாற்று ஆர்வலர்களின் மரபுவழி நடைபயணத்தின்போது கிடைத்தது

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் நேற்று மரபுவழி நடை பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர்கள், அங்கு சிதையுண்ட நிலையில் கிடந்த சமணர் சிலையை மீட்டு, அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை, கவிநாடு பகுதியில் சுமார் 450 ஏக்கரில் கவிநாடு கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை ஆய்வு மேற்கொள்ளும் விதமாக, மக்கள் பாதை, தொல்லியல் ஆய்வுக் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் நேற்று மரபுவழி நடை எனும் நடைபயணம் மேற்கொண்டனர். இதில், பழமையான நீர்ப் பாசன அமைப்பை கண்டறிந்ததுடன், அங்கு சிதைந்து கிடந்த சமணர் சிலையைக் கண்டெடுத்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியது: இங்குள்ள நீர் மேலாண்மை குறித்த தமிழர்களின் கட்டமைப்பு முன்மாதிரியாக அமைந்துள்ளது. அதன்படி கடந்த 872-ல் பாண்டிய மன்னரான மாறஞ்சடையோன் என்பவரால் ஒரு இடத்தில் இருந்து 6 வாய்க்கால்களில் தண்ணீரை பிரிக்கும் பெரிய அளவிலான குமிழி அமைப்பு உள்ளது. ஆய்வின்போது, இங்கு மூன்று பகுதியாக சிதைந்த நிலையில் கிடந்த சமணர் சிலை கண்டெடுக்கப்பட்டது. பின்னர், அந்த சிலை, புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இங்கு சமணர் பள்ளி இருந்ததற்கு ஆதாரமான கட்டுமானப் பொருட்களும் கிடந்தன. இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

மரபுவழி நடை பயணத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுகை செல்வா கூறியது: கவிநாடு கண்மாயில் மிதமிஞ்சிய தண்ணீரைக் கொண்டு குண்டாறு எனும் புதிய ஆறு உருவாகி உள்ளது. பின்னர், இந்த ஆற்றுத் தண்ணீர் தெற்கு வெள்ளாறு மூலம் கடலுக்கு சென்றுள்ளது. அந்த அளவுக்கு தண்ணீரின் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது இந்தக் கண்மாய் வறண்டு காணப்படுகிறது. மேலும், இங்கு சமணர் காலத்து வரலாற்று சின்னங்கள் காணப்படுகின்றன. இந்தக் கண்மாயை பராமரிக்கக் கேரி ஆட்சியரிடம் வலியுறுத்த உள்ளோம். இதேபோல, பொற்பனைக்கோட்டை, நார்த்தாமலை, அம்பலத்திடல் போன்ற பகுதியில் மரபுவழி நடைபயணம் மேற்கொண்டு, தொன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x