Last Updated : 29 Sep, 2017 10:09 AM

 

Published : 29 Sep 2017 10:09 AM
Last Updated : 29 Sep 2017 10:09 AM

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இடைக்கால நிவாரணம்: மாதம் ரூ.13.20 கோடி கூடுதல் செலவாகும்

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளத்தில் இருந்து இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.1200 வழங்க மேலாண்மை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்றவர்கள், பணியில் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.7000 கோடி நிலுவை தொகையை கேட்டு மே 15-ம் தேதி மதியம் முதல் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இதை தொடர்ந்து மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த 82 வயது ஓய்வு பெற்ற ஓட்டுநர் மாயாண்டி என்பவர், வேலைநிறுத்தத்துக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை ஆட்சேபித்து உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை தாமாக முன்வந்து, வழக்காக விசாரித்த நீதிபதிகள், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சுறுசுறுப்படைந்துள்ளது. செப்டம்பர் 25-ல் சென்னையில் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஊதிய ஒப்பந்தம் ஏற்படும் வரை போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மாதம் ரூ.1200 இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை

இந்நிலையில் போக்குவரத்து அமைச்சரின் அறிவிப்பு அடிப்படையில், தகுதியுள்ள போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் இடைக்கால நிவாரணமாக செப்டம்பர் மாத சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.1200 வழங்க வேண்டும் என அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களுக்கு, போக்குவரத்துக் கழகங்களின் தலைவரும் கூடுதல் தலைமைச் செயலருமான பி.டபிள்யூ.சி.டேவிதார் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஒவ்வொரு மேலாண்மை இயக்குநர்களுக்கும் நேற்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

1.10 லட்சம் பேர் பயன்

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.50 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 1.10 லட்சம் பேர் நிரந்தர பணியாளர்கள். இவர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளத்தில் கூடுதலாக ரூ.1200 வழங்கப்படுகிறது. எஞ்சிய 40 ஆயிரம் தற்காலிக ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படுவது தொடர்பாக சுற்றறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இடைக்கால நிவாரணம் வழங்குவதால் போக்குவரத்துக் கழகங்களுக்கு மாதம்தோறும் ரூ.13 கோடியே 20 லட்சம் கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x