Last Updated : 28 Sep, 2017 08:44 AM

 

Published : 28 Sep 2017 08:44 AM
Last Updated : 28 Sep 2017 08:44 AM

எம்ஜிஆர் பார்முலாவுடன் அதிமுக - பாஜக கூட்டணி: மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் - பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா திட்டம்

மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தவும், எம்ஜிஆர் பார்முலாவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக கொடி, சின்னம், பெயர் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு நடந்த பொதுக்குழுவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் நியமனங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. பொதுச்செயலாளரின் அனைத்து அதிகாரங்களும் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழலில் முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, அக்டோபர் 4-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இப்படி நிலையற்ற நிலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசை மத்திய பாஜக அரசு காப்பாற்றி வருவதாக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அதிமுகவுக்கு 35 சதவீத வாக்கு வங்கி உள்ளது. இதில் சுமார் 20 சதவீதம் திமுகவுக்கு எப்போதுமே வாக்களிக்க விரும்பாத இந்துத்துவ சிந்தனை கொண்டவர்களின் வாக்குகள். அதனால்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திராவிடம் பேசினாலும் இந்து என்ற அடையாளத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை. திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தீவிர இந்துத்துவ எண்ணம் கொண்டவர்கள்கூட அதிமுகவுக்கு வாக்களித்து வந்தனர். ஜெயலலிதா மரணத்தால் இந்த வாக்காளர்களை பாஜக பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே மோடி, அமித்ஷாவின் எண்ணமாக உள்ளது’’ என்றார்.

பாஜக நிறுவனர் தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த 25-ம் தேதி டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழக தலைவர்களுடன் நடப்பு அரசியல் குழப்பங்கள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். ‘பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சிகள் எல்லா விஷயத்திலும் பாஜக மீது குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, அரசை ஆதரிப்பது பாஜகவுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என சில தலைவர்கள் அமித்ஷாவிடம் எடுத்துக் கூறியுள்ளனர். அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், நல்ல முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 'தி இந்து'விடம் பேசிய பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

உத்தரப்பிரதேசம், பிஹார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான். குஜராத் போன்ற மாநிலங்களில் கடந்த 2014-ல் பெற்ற இடங்களை மீண்டும் பெறுவது கடினம் என மோடியும், அமித்ஷாவும் நினைக்கின்றனர். எனவே, 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கணிசமான இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பது அவர்களின் இலக்காக உள்ளது.

தற்போதைய நிலையில் பழனிசாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. எம்ஜிஆர் காலத்தில் மக்களவை தொகுதிகளில் மூன்றில் 2 பங்கு இடங்களில் காங்கிரஸும், சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் 2 பங்கு இடங்களை அதிமுகவும் பகிர்ந்து கொண்டு போட்டியிட்டன. இது எம்ஜிஆர் பார்முலா என அழைக்கப்பட்டது.

அதேபோல சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு மூன்றில் 2 பங்கு இடங்களை விட்டுக் கொடுத்துவிட்டு, மக்களவையில் மூன்றில் 2 பங்கு இடங்களை பெற்றுக் கொண்டு தேர்தல் கூட்டணி அமைக்க மோடியும் அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x