Published : 27 Sep 2017 08:33 AM
Last Updated : 27 Sep 2017 08:33 AM

3 ஆண்டுகளை நிறைவு செய்த மங்கள்யான் செயற்கைக்கோள்: கண்டுபிடிப்புகளை இஸ்ரோ வெளியிட்டது

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

சூரிய மண்டலத்தின் 4-வது கிரகமும் பூமிக்கு அருகாமை கிரகமுமான செவ்வாயை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி, குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து பிரிந்த மங்கள்யான் செயற்கைக்கோள், சுமார் 9 மாத பயணத்துக்கு பின்னர் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. செவ்வாய் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் நுழைந்து தற்போது 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

தொடர்ந்து செயல்படும்

செவ்வாய் கிரகத்தை 6 மாதங்களுக்கு சுற்றிவந்து மங்கள்யான் ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் எரிபொருள் மிச்சமிருப்பதால், சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு 3 ஆண்டுகளாகியும் நல்ல முறையில் செயற்கைக்கோள் இயங்கி வருகிறது.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, “மங்கள்யான் செயற்கைக்கோள் தற்போதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் மேலும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயங்கும்” என்றனர்.

மங்கள்யான் செயற்கைக்கோளில் அதிநவீன புகைப்படக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் இதுவரை 715 புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்களை பொதுமக்கள் பார்வைக்கு அவ்வப்போது இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு மங்கள்யானின் முதலாமாண்டு தகவல்களை இஸ்ரோ வெளியிட்டது. இதனையடுத்து 3-ம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளதையடுத்து, 2-ம் ஆண்டு (2015 முதல் 2016 வரை) தகவல்களை நேற்று முன்தினம் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்த தகவல்களை ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இஸ்ரோ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு இணையதளத்தில் சொந்த விவரங்களைக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

விலை குறைந்த செயற்கைக்கோள்

செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பும் முயற்சியில் சோவியத் யூனியன், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. இவற்றில் எந்த நாடும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றதில்லை. இந்தியா மட்டுமே முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. அதுவும் பிற நாடுகளின் செயற்கைக்கோளை ஒப்பிடும்போது மங்கள்யானின் தயாரிப்பு செலவு மிகக் குறைவு. வெறும் ரூ. 450 கோடியில் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.

விண்வெளியில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப இதன் சுற்றுப்பாதை மாற்றப்பட்டு வருவதால், 2020-ம் ஆண்டு வரை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் மங்கள்யான் 2 என்ற செயற்கைக்கோள் செவ்வாய்க்கு அனுப்பும் முயற்சியிலும் இஸ்ரோ இறங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x