Published : 24 Sep 2017 01:35 PM
Last Updated : 24 Sep 2017 01:35 PM

ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் துரோகம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கின்றனர்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கருத்து

அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தவர்கள் தற்போது தண்டனை அனுபவித்து வருகிறார்கள் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை நகர அதிமுக சார்பில் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகரச் செயலாளர் சோமு ரவி தலைமையில் குளித்தலை சுங்கவாயில் ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசியதாவது: எம்ஜிஆரால் தான் தமிழகத்தில் திராவிட கட்சி நிலைத்து நின்றது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு எம்ஜிஆரின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, அவரை திமுகவிலிருந்து வெளியேற்றினார். அப்போது அதிமுக உருவானது.

தற்போது, ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். அதனால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகள் ஆனாலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்வராகும் கனவு பலிக்காது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பம் விரைவில் திகார் சிறைக்குச் செல்லும். ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் துரோகம் செய்தவர்கள் தற்போது தண்டனை அனுபவித்து வருகின்றனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றார்.

பெரம்பலூர் எம்.பி மருதைராஜ், முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், தலைமைக் கழக பேச்சாளர்கள் பாண்டியன், ஜலேந்திரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், துணைச் செயலாளர் சசிகலா, ஒன்றியச் செயலாளர்கள் விஜயன், மணி, அரசு வழக்கறிஞர்கள் நாகராஜன், செந்தில்குமார், நகர துணைச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக குளித்தலை ஒன்றியச் செயலாளர் விநாயகம் வரவேற்றார். நங்கவரம் நகரச் செயலாளர் திருப்பதி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x