Published : 24 Sep 2017 08:01 AM
Last Updated : 24 Sep 2017 08:01 AM

ராஜீவ்காந்தியின் கனவு திட்டம்..: நவோதயா பள்ளியால் நாடு முழுவதும் தமிழ் வளரும்

நாட்டின் முதல் ஜவஹர் நவோதயா பள்ளி மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் 1986-ல் தொடங்கப்பட்டது. தேசிய ராணுவ அகாடமியில் பேராசிரியராக இருந்த எனக்கு அப்பள்ளியின் முதலாவது முதல்வராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கனவுத் திட்டமான நவோதயா பள்ளியை அன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் தொடங்கி வைத்தார்.

டேராடூனில் உள்ள புகழ்பெற்ற டூன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் என் மனைவி. இதனால், அப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆசிரியர் குடியிருப்பில் 3 ஆண்டுகள் வசித்தோம். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரச குடும்பத்தினர் என பெரும் செல்வந்தர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி அது.

ராஜீவ், சஞ்சய், ராகுல் காந்தி என நேரு குடும்பத்தினர் பலரும் இங்குதான் படித்தனர். டூன் பள்ளியில் படித்த ராஜீவ்காந்திக்கு அதுபோன்ற உறைவிடப் பள்ளியை நாடு முழுவதும் தொடங்க வேண்டும்; அதில் கிராமப்புற ஏழை மாணவர்களைப் படிக்கவைக்க வேண்டும் என கனவு கண்டார். அந்த கனவின் விளைவாகத் தோன்றியதுதான் ஜவஹர் நவோதயா பள்ளிகள். அமராவதியில் தொடங்கி பல மாநிலங்களிலும் உள்ள நவோதயா பள்ளிகளில் முதல்வராக 18 ஆண்டுகள் பணியாற்றினேன். டூன் பள்ளியில் கிடைத்த அனுபவம் எனக்கு மிகவும் உதவியது.

இன்று தமிழகத்தை தவிர, நாடு முழுவதும் சுமார் 600 நவோதயா பள்ளிகள் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் இப்பள்ளிகளில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 50 சதவீத மாணவர்கள் அதாவது 11,000 பேர் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர். மருத்துவம் மட்டுமல்லாது, ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ், என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் நவோதயா மாணவர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர். இத்தனைக்கும், இவர்கள் அனைவரும் வசதியற்ற கிராமப்புற மாணவர்கள். எவ்வளவு பெரிய சாதனை இது!

இப்படி நாடு முழுவதும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் அரிய பல வாய்ப்புகள் தமிழக மாணவர்களுக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பது என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. எனவேதான், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளேன்.

‘இந்தி, சமஸ்கிருத திணிப்பு.. இருமொழி கொள்கைக்கு எதிரானது’ என்றெல்லாம் கூறி நவோதயா பள்ளிகளுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது. நவோதயா பள்ளிகளில் 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு 33 சதவீதம், எஸ்.சி. - 15 சதவீதம், எஸ்.டி. - 7.5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3.5 சதவீதம் என இட ஒதுக்கீடு உண்டு. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உணவு, விடுதி வசதி, சீருடை, புத்தகங்கள் என அனைத்தும் இலவசம். 6-ம் வகுப்பில் சேர வேண்டுமானால், 5-ம் வகுப்பு வரை எந்த பயிற்றுமொழியில் படித்தார்களோ, அந்த மொழியிலேயே நுழைவுத்தேர்வு எழுதலாம்.

நவோதயா பள்ளிகள் அனைத்திலும் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி. 2-வது மொழிப் பாடமாக அந்தந்த மாநில மொழிகள் இருக்கும். புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்கிறது. அங்குகூட இந்தி என்பது விருப்பப் பாடமாக மட்டுமே உள்ளது. அதில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம்கூட இல்லை.

இதைவிட முக்கியமாக, எந்த பள்ளியிலும் சமஸ்கிருதம் கிடையாது. எனவே, நவோதயா பள்ளியால் தமிழ் புறக்கணிக்கப்படும் என்ற இவர்களது வாதம் முற்றிலும் தவறானது.

அனைத்து நவோதயா பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு மாணவர்களை வேறு மாநிலத்தில் உள்ள பள்ளிக்கு மாற்றுவார்கள். அவர்கள் அந்த ஓராண்டு முழுவதும் அங்கு படிப்பார்கள். தேசிய ஒருமைப்பாட்டை மாணவர்கள் உணர்வதற்காக இந்த ஏற்பாடு. தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் இருந்திருந்தால் வட மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்களில் தமிழக மாணவர்கள் சென்று படிக்கும் சூழல் உருவாகியிருக்கும். தமிழ் மாணவர்கள் படிப்பதால், அங்கு தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இதன்மூலம் தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றை பிற மாநில மாணவர்களும் எளிதாக அறிந்து கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கும். தமிழகத்தின் மொழி அரசியலால் இந்த வாய்ப்பு தகர்க்கப்பட்டிருக்கிறது.

நவோதயா என்பது மாதிரி பள்ளிகளாகும். இப்பள்ளி மூலம் அந்த மாவட்டத்தில் உள்ள மற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். நவோதயா பள்ளியின் வளர்ச்சி அந்த மாவட்டத்தில் மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும்.

நவோதயா பள்ளி மூலம் நாட்டை காவிமயமாக்க மோடி அரசு முயற்சிப்பதாக சில தலைவர்கள் பேசி வருவது மக்களை ஏமாற்றும் மலிவான அரசியல். கிராமப்புற மக்களுக்காக ராஜீவ்காந்தி கொண்டுவந்த புரட்சிகரமான திட்டத்தை கொச்சைப்படுத்தும் முயற்சி இது.

30 ஆண்டுகளுக்கு முன்பு, 1986-ம் ஆண்டிலேயே தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டிருந்தால், இதுவரை தமிழக கிராமப்புற மாணவர்கள் 1 லட்சம் பேர் மிக உயர்ந்த நிலையை அடைந்திருப்பார்கள். நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல், அதை எதிர்த்துப் போராட வேண்டிய நிலை வந்திருக்காது.

இந்த நிலையில்தான், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற நல்ல தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்போது வழங்கியிருக்கிறது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் நவோதயா பள்ளிகளைத் தொடங்க தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை தமிழக அரசியல் கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோள்!

கட்டுரையாளர்: நாட்டின் முதல் நவோதயா பள்ளியின்முதலாவது முதல்வராக பணியாற்றியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x