Published : 23 Sep 2017 12:23 PM
Last Updated : 23 Sep 2017 12:23 PM

ஜெ., இட்லி சாப்பிடவில்லை; பொய் சொன்னதற்கு மன்னித்துவிடுங்கள்: திண்டுக்கல் சீனிவாசன்

‘ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. நாங்கள் சொன்னது எல்லாம் பொய். பொதுமக்கள் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று யில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நிமியக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிருப்தி நிர்வாகிகள், 11 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டனர். அதனால், சசிகலா ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு அவர் வகித்த பொருளாளர் பதவியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார்.

அப்போது நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘அமைச்சர்கள் எல்லோரும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தோம். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 3 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க சில ஆலோசனைகள் சொல்லி வாழ்த்தி அனுப்பி வைத்தார். வெற்றி பெற்ற பிறகு மீண்டும் நாங்கள் ஜெயலலிதாவை சந்தித்தோம். அவரை கொலை செய்துவிட்டனர் என ஓ.பன்னீர்செல்வம் தவறான பிரச்சாரத்தை பரப்புகிறார். ஜெயலலிதாவை சசிகலா கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர் சாவில் மர்மம் இல்லை. இது என் பிள்ளைகள் மீது சத்தியம்’ என்றார். அடுத்த சில நாட்களில் காட்சிகள் மாறின.

அதன் பிறகு கடந்த வாரம் திண்டுக்கல் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘ராகுல் காந்தி, ஆளுநர் உட்பட யாரும் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. தொற்றுநோய் என்று கதை சொல்லி மற்றவர்களை பார்க்கவிடவில்லை. ஜெயலலிதாவை பார்த்தால் எங்கே அவர் உண்மையை சொல்லிவிடுவாரோ என்று நினைத்து தடுத்து கொலை செய்துவிட்டனர். இதுதான் உண்மை’ என்றார். அடுத்து மேலும் சில காட்சிகள் மாறின.

இந் நிலையில், மதுரை பழங்காநத்தத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஜெயலலிதாவுக்கு சரியான மருந்து கொடுக்காமல் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்க என்று நாங்கள் பொய் சொன்னோம். நாங்கள் யாருமே அவரை பார்க்கவில்லை.

குடும்பத்தில் சில சமயம் சண்டைகள் வரும். அப்போது பக்கத்து வீட்டுக்கு தெரியக்கூடாது என்பதற்காக சில உண்மைகளை மறைப்போம். அதுபோலத்தான், எங்க கட்சி ரகசியம் மற்ற கட்சிகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் எல்லோரும் சேர்ந்து சில பொய்களை சொன்னோம். அதை மறைத்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். எங்களை மன்னித்துவிடுங்கள்.

அமித்ஷா, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, வெங்கையா நாயுடு போன்றவர்களைகூட பார்க்கவிடவில்லை. அவர் பார்த்தார், இவர் பார்த்தார் என்று சொல்வதெல்லாம் பொய். யாராவது பார்த்ததாக சொன்னால் அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். நாம் அவரிடம் விசாரிக்கலாம்.

வீடியோ வைத்து இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். போட்டுக் காட்டுங்கள். உண்மையிலேயே அவர் சாதாரணமாக இறந்திருந்தால் ஏன் வீடியோவை போட்டுக்காட்ட தயங்க வேண்டும். ஏன் மறைக்க வேண்டும். எங்களைப் போன்ற தொண்டர்களுக்கு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இதை சொன்னால் சீனிவாசன் ஜெயிலுக்கு போய்விடுவார் என்கிறார்கள். முதல்வர் பழனிசாமி விசாரணை கமிஷன் வைத்துள்ளார். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பது விசாரணைக்கு பிறகு தெரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சசிகலாவுக்கும், தினகரனுக்கும் நெருக்கடி கொடுப்பதாக நினைத்து அமைச்சர்கள் தாங்கள் முன்பு சொன்னது எல்லாம் பொய் என்று சொல்வதன் மூலம் இவர்கள் மீது திரும்பியுள்ள குற்றச்சாட்டுகள் முதல்வர் பழனிசாமி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x