Published : 20 Sep 2017 08:23 AM
Last Updated : 20 Sep 2017 08:23 AM

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: வேலைநிறுத்த போராட்டம் நடக்குமா?

போக்குவரத்துக கழக ஊழியர் சங்கங்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை எந்தவித இறுதி முடிவும் எடுக்காமல் முடிந்தது.

தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுட்டனர்.

இந்நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சுமுக முடிவை எட்டுவதற்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து செப்டம்பர் 24-ம் தேதிக்கு பிறகு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து, முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்தது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் யாஸ்மின் பேகம் தலைமையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 8 போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகிகள், தொழிற்சங்க தலைவர்கள், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பகல் 12 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தது. ஆனால், இதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இதுகுறித்து நிருபர்களிடம் சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கூறிய தாவது:

அரசு அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பிள்ளைகள் படிக்க உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை அரசிடம் ஒப்படைக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதை ஏற்க முடியாது.

‘கோரிக்கைகள் குறித்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார். எனவே, வேலைநிறுத்த முடிவை கைவிடுங்கள்’ என தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் கேட்டுக்கொண்டார். அமைச்சர் அழைத்தால் பேசத் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை பொறுத்து வேலைநிறுத்த போராட்டத்தை தள்ளிவைப்பது குறித்து கலந்து பேசி முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் நலத் துறையில் துணை ஆணையராக இருந்த யாஸ்மின் பேகம், பதவி உயர்வு பெற்று சென்னை மண்டலத்துக்கான இணை ஆணையராக நேற்றுதான் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x