Published : 17 Sep 2017 08:51 AM
Last Updated : 17 Sep 2017 08:51 AM

என்எல்சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு 50% வேலைவாய்ப்பு: நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஒப்பந்த தொழிலாளர்களை தேர்வு செய்யும்போது ஏற்கெனவே நிலம் வழங்கியவர்களின் குடும்ப உறுப்பினர் களுக்கு 50 சதவீத வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான கடலூரைச் சேர்ந்த சேகர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் கடந்த 1956-ல் தொடங்கப்பட்டது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களை கையகப்படுத்தி இந்த பழுப்பு நிலக்கரி கழகம் ஆரம்பிக்கப்பட்டது. நிலங்களை வழங்கியவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 50 சதவீத வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கடந்த 2009-ல் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி நிலம் வழங்கிய 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 1995-ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

தற்போது 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும், 12 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், 4 ஆயிரம் பொறியாளர்களும், 5 ஆயிரம் அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். இந்த 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென தொடர்ந்து பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த 4.7.17 அன்று நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ஏற்கெனவே நிலம் வழங்கி பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்கிற நிபந்தனை இல்லை. எனவே ஒப்பந்த தொழிலாளர் தேர்வு குறித்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே பணியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

கண்காணிக்க வேண்டும்

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று நடந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதாடினார். அதையடுத்து என்எல்சி நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தும்போது ஏற்கெனவே நிலம் வழங்கியவர்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, என்எல்சி நிர்வாகம் முறையாக இந்த 50 சதவீத வேலைவாய்ப்பை நிலம் வழங்கியவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இதை நிர்வாகம் சரியாக செய்துள்ளதா என்பதை மத்திய நிலக்கரித்துறை, தமிழக அரசின் சமூக நலம் மற்றும் தொழில்துறை முதன்மைச் செயலாளர், கடலூர் ஆட்சியர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x