Published : 17 Sep 2017 08:29 AM
Last Updated : 17 Sep 2017 08:29 AM

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியால் அமைச்சர்கள் ஆவேசம்: முதல்வர் பழனிசாமி - தினகரன் மோதல் உச்சகட்டம் - சிறைக்கு செல்வீர்கள் என ஒருவருக்கு ஒருவர் பகிரங்க மிரட்டல்

டிடிவி தினகரன் சிறைக்குச் செல்வார் என முதல்வர் பழனிசாமியும், முதல்வரும் அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள் என டிடிவி தினகரனும் மாறி மாறி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

அதிமுகவில் 21 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கலைப்பேன் என்று தினகரன் பேசி வருகிறார். நீதிமன்றத்திலும் தினகரன் தரப்பில் வழக்குகள் உள்ளன. இது மட்டுமின்றி, ஆளுநர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லும் நிலை உள்ளது. இதனால், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. தினகரனின் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியால் அமைச்சர்களும் ஆவேசமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தினகரனை கடுமையாக பழனிசாமி விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:

டிடிவி தினகரன் 10 ஆண்டு காலம் வனவாசம் போய்விட்டார். ஜெயலலிதாவால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் இவர். ஜெயலலிதா இருக்கும் வரை சென்னை பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. இங்கு மேடையில் இருப்பவர்கள் அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தினகரன் ஒரே நாளில் உறுப்பினராகி, ஒரே நாளில் பதவி ஏற்றுக்கொண்டு கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறார். உலகில் இதுபோன்ற அதிசயம் எங்கேயும் கிடையாது.

நாங்கள் பல ஆண்டு காலம் உழைப்பால் பெற்ற பதவி இது. உழைப்புதான் நிலைத்து நிற்கும். குறுக்கு வழி நிற்காது. என்னமோ, இவர் ஊரெல்லாம் சென்று பிரச்சாரம் செய்து, இவரால் ஆட்சி அமைத்தாக நினைத்துக்கொண்டு, தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பேசுகிறார். இவரா எங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தார். நான் 9 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 9 முறையும் ஜெயலலிதாவின் செல்வாக்கால், மக்களின் துணையுடன் தேர்தலில் நின்றேன். எங்களுக்கு நீங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தீர்களா? எங்களை ஏன் உரிமை கொண்டாடுகிறீர்கள்.

இந்த ஆட்சிக்கும், கட்சிக்கும் உங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. எப்படியாவது இந்த கட்சியையும், ஆட்சியும் பிடிக்க வேண்டும் என தினகரன் செயல்படுகிறார். ஆனால், அவர்களுக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. இந்த ஆட்சியை கலைத்து விடுவேன் என கூறி வருகிறார். இந்த ஆட்சி எப்படி கலையும், எல்லோரும் உங்களால் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களா, பெருபான்மையான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்ததால்தான் நான் முதல்வராக இருக்கிறேன். மற்றவர்கள் இங்கு அமைச்சர்களாக இருக்கின்றனர். குறுக்கு வழியில் இந்த ஆட்சியையும், கட்சியையும் பிடிப்பது நடக்காது. ஆட்சிக்கும், கட்சிக்கும் துரோகம் செய்கிறவர் தினகரன்.

எங்களை வீட்டுக்கு அனுப்புவதாக கூறுகிறார். நாங்கள் வீட்டில் இருந்துதான் வந்தோம். அதனால் பணி முடிந்ததும் வீட்டுக்குதான் செல்வோம். ஆனால், நீங்கள் வீட்டுக்கு அல்ல, சிறைக்குதான் செல்வீர்கள். வெற்றிவேல் எம்எல்ஏ திமுகவுடன் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளார். அப்படியென்றால் என்ன அர்த்தம், சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி சேரவேண்டியதாகி விட்டது என தினகரன் கூறுகிறார். ஜெயலலிதா இருந்தால் நீங்கள் இப்படி செய்வீர்களா?

இவ்வாறு முதல்வர் பேசினார்.

அதே நேரத்தில் முதல்வரின் பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ஜெயலலிதா மீது இருந்த கோபத்தில் நரசிம்ம ராவ் என்னை சிறைக்கு அனுப்பினார். அதன்பிறகே ஜெயலலிதா என்னை நேரடி அரசியலுக்கு கொண்டு வந்தார். இது முதல்வர் கே. பழனிசாமிக்கே தெரியும். இவர்கள் அமைச்சர்களான பின்னர் ஜெயலலிதாவை ஏமாற்றியது அனைவருக்கும் தெரியும். தற்போது சேகர் ரெட்டி வழக்கில் சிக்கியுள்ளனர். கே.பழனிசாமி முதல்வரான பிறகு, “எனக்கு பயமாக இருக்கிறது. என் மகனின் சகலையின் அப்பா ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். அதனால், எந்த நேரத்திலும் என்னையும் என் மகனையும் கைது செய்யலாம்” என என்னிடம் தெரிவித்தார்.

அரசியலுக்கு வந்த பிறகு இதுபோன்ற வேலைகளை செய்யக் கூடாது. செய்தால் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என தெரிவித்தேன். இவர்கள் எல்லாம் வீட்டுக்கு புறப்பட்டால் நேராக சிறைக்குத்தான் செல்ல வேண்டும். அந்த பயத்தில்தான் இவ்வாறு பேசுகிறார். அன்புநாதன் வழக்கில் சிபிஐ, வருமான வரித்துறை ஆகியோரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். முதல்வரான பிறகு இப்படி வாய்க்கு வந்ததபடி பழனிசாமி பேசக்கூடாது. அவ்வாறு பேசுவதை அவர் குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் பழனிசாமி, தினகரன் இடையே வலுத்து வரும் இந்த மோதலால் தமிழக அரசியலில் பரபரப்பும் அதிமுகவினரிடையே குழப்பமும் நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x