Published : 15 Sep 2017 10:13 PM
Last Updated : 15 Sep 2017 10:13 PM

ஒரு நல்ல நாளில் அரசியல் பிரகடனத்தை அறிவிப்பேன்: கமல் பதில்

 

ஒரு நல்ல நாளில் அரசியல் பிரகடனத்தை அறிவிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

'தி இந்து' தமிழ் நாளிதழ் நடத்தும் 'யாதும் தமிழே' விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஒரு நிகழ்வாக கலந்துரையாடலில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல் பதிலளித்துப் பேசினார்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆக்டிவா செயல்பட்டபோது ஏன் அமைதியாக இருந்தீர்கள்?

இதுக்கு கிட்டத்தட்ட பதில் சொல்லி விட்டேன். அவர் கேட்ட கேள்விக்கு நான் சொல்வதை விட நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும். அது தீர்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல நடிகன் தான். இது நடிப்பாக இருக்கக் கூடும் என்று பல நடிகர்கள் நடித்ததால் இந்த எண்ணம் வந்திருக்கும். இதைப்பார்த்து தான் நானும் ஒதுங்கி இருந்தேன். நிஜமாகவே நடிப்பவர்கள் அதிகமாகி விட்டதால்தான் நானும் நடிக்கிறேன் என்று நினைக்கிறார்கள்

இந்த உலகத்தில் கடவுள் இருப்பதை நிரூபிக்க ஒரு விஷயம் கூட இல்லையா கமலுக்கு?

கடவுள் என்பதற்கான சொல் விளக்கம் நீ உனக்குள் கடந்து செல் என்பது தான். அனைத்து ஸ்லோகங்களும் என்னைக் குறிப்பிடுகிறது. இதை இல்லை என்று சொல்லும் பல பண்டிதர்கள் இருக்கின்றனர். மதம் ஒரு கார்ப்பரேட் ஸ்ட்ரக்சர் அது ஒரு பிசினஸ். ஆனால் கடவுளை நம்பும் மனிதர்களை நான் கும்பிடுகிறேன். உங்கள் பக்தியின் மேல் எனக்கு கோபம் இல்லை. இந்த பக்தியை பயன்படுத்தி விளையாடுகிறார்களே அவர்கள் மீதுதான் கோபம். எந்த மதத்தையும் நீங்கள் பகுத்தறிந்து உணரலாமே. மொழி போன்றது உங்கள் பக்தி. எனக்கு பேச வராது. ஆனால் வேறு மொழி இருக்கிறது அது அன்பெனும் மொழி. அன்பை சொல்லாதே, உடனே இணைவேன். வேறு வித்தை காட்டாதே.

எனக்கு இஸ்லாத்தில் வைணவத்தில் சைவத்தில் சமணத்தில் தென்படுகிறது, மேற்கத்திய நாடுகளில் உள்ள ஒரு பிரிவு அசகாய சக்தி என்று பிரிக்கிறார்கள், இதையெல்லாம் பார்க்கிறேன். ஒவ்வொரு மதத்திலும் நல்லதும் இருக்கிறது கெட்டதும் உள்ளது.

பேஸ்புக்கால் உதவியா உபத்திரவமா?

நமது சொசைட்டிக்கு எல்லாம் உதவும் ஃபேஸ்புக்கும் உதவும் ட்விட்டரும் உதவும். அதை நாம் பயன்படுத்த வேண்டும்

பொது மேடைக்கு ஏன் வர மாட்டேங்கிறீங்க?

தங்கைக்கான பதிலிதோ இந்த மேடை இன்னும் பல உண்டு

அஹிம்சை முறையில் போராடி நம்மால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியுமா? ஒரு பிரச்சினைக்காக ஏன் எல்லோரும் ஒன்று கூட மாட்டேங்கிறாங்க?

இது என்னை கேட்கிற கேள்வி இல்லை உங்களை கேட்கும் கேள்வி. அஹிம்சை வீரத்தின் உச்சகட்டம். அதனால் தான் என்னவோ மாபெரும் முனிவர்களை மஹாவீரர் என்று அழைக்கிறார்கள். அஹிம்சையின் உச்சகட்டம் மஹாவீரம். மஹாவீரம் வராவிட்டாலும் ஆரம்ப வீரமாவது வரவேண்டாமா? துப்பாக்கி தோட்டாவில் இருந்து வந்தது போல் துடித்து வந்ததாக நினைக்கிறேன்

அடுத்த குல்லா என்னவாக இருக்கும்?

முடிதான் என் குல்லா. இதுவும் உதிர்ந்துவிடும். குல்லாவுக்கு வேலை எல்லாம் இல்லைங்க, குளிருக்கு வேண்டுமானால் போட்டுக்கலாம்.சென்னையில் எதுக்குங்க

கேரளாவிற்கு சென்றீர்களே. முதல்வரைப் போய் சந்தித்தீர்களே ஏன்?

இங்கேயும் சந்திக்க ஆசைதான் போறதுக்குள்ள மாறிடுமோன்னு பயம் தான். அங்கு குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தெரு சுத்தமாக இருக்கு. ஸ்வச் பாரத் அங்குதான் நன்றாக உள்ளது. எல்லோரும் மெடிக்கல் டூரிசம் சென்றார்கள், நான் அங்கு பொலிட்டிக்கல் டூரிசம் போனேன். யார் சொன்னாலும் கேட்டுக்குவேன் ஆனால் முடிவை நான் தான் எடுப்பேன். இதோ 'தி இந்து'வுக்கு தெரியுமே அந்த சிஸ்டம் எப்படி வெற்றி அடைகிறது என்று நீங்கள் சொன்னது தான் என்கிறார்களே. அதைத்தான் நானும் சொல்கிறேன் நீங்கள் சொல்லுங்கள்.

கோபத்தை வேறு பக்கம் காட்டுங்கள். ஒரு சின்ன பொட்டி,லேசா அழுத்தினால் போதும். ஊழலை எப்படி ஒழித்துக்கட்டுவது ஊழல் மட்டும்தான் இவரது தாரக மந்திரமா என்று நினைக்காதீர்கள். அது அவர்களின் தாரக மந்திரம். ஊழலை ஒழிக்க வேண்டுமானால் நீங்கள் ஊழல் இல்லாமல் இருங்கள். ஐந்தாயிரம் வாங்கி ஓட்டு போடாதீர்கள். நீங்கள் நல்ல அரசுக்கு வாக்களித்தால் அதை மூன்றே மாதத்தில் சம்பாதிக்கலாம். உங்களுக்கு அளிக்கும் ஐந்தாயிரம் உங்களுக்கு வர உள்ள மூன்று லட்சத்திற்கு சமம்.

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தால் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்?

ஆண்டி கூடி மடம் கட்டிய கதை. கற்பனையின் எல்லைக்கு போய்விட்டார். எனக்கு மக்களிடம் இருந்து சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும் பேசலாம். உங்களோடு இணைபவன் அவருடன் இணைய மாட்டேனா? அவருடன் பேசவில்லை என்று நினைக்கிறீர்களா, அல்லது அவரிடம் பேசுவதை உங்களிடம் தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?

சொந்த வாழ்க்கையை விமர்சிப்பதை எப்படி சந்திக்கப் போகிறீர்கள்?

இதற்கு பதில் என் வாழ்க்கை. என் சொந்த வாழ்க்கை என் முடிவு என்பேன். அதே தைரியம் இதற்கும் உண்டு. என் சொந்த வாழ்க்கை அதற்கு பதில்.

பணத்திற்கு ஏன் அப்படி பலம் வந்தது?

பெரிய கோடீஸ்வரர்கள் உருவானது ஏழைகளால்தான். கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அரசியலுக்கு வந்தால் உங்கள் கொள்கை எவ்வழி?

பெரியார் எங்கிருந்து கற்றார் அரசியலை, அவர் கற்றது காந்திய வழி அங்கிருந்து அரசியலை கற்று பின்னர் தனக்கான பாதையை மார்க்சியம் வழியில் கற்றார். மார்க்சியம் என்பது லெனின் இவர்கள் வகுத்த பாதை, இவர்கள் தோளில் ஏறிப் பார்க்கும்போது எனக்கு தூரத்தில் ஒளி தெரிகிறது அதில் பாடுபடுகிறேன் 

லோக்கல் கவர்னன்ஸ் குறித்து உங்கள் கருத்து?

பர்சனல் கவர்னன்ஸ் நீங்கள் உங்கள் நிலை பற்றி யோசியுங்கள் சரி இல்லை சரி இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். 

பன்முகத்தன்மைக்கு எதிராக , மூட நம்பிக்கைக்கு எதிராக போராடிய பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

வன்முறை பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் முக்கியம்.வன்முறை அதற்கு தனியாக அறிவு கிடையாது. அது எப்போது வேண்டுமானால் மதம் மாறும். இப்போது நான் உங்களுக்கு திருப்தியான பதில் சொல்லவில்லை என்று நினைக்காதீர்கள். வன்முறைக்கு எதிராக என்ன சொல்ல இன்று போய் நாளை வா தோல்வி நிச்சயம். நாளை நானில்லாவிட்டால் யாராவது இருப்பார்கள். மாறி மாறி நடந்ததால் தான் நாடு இரண்டாக ஆனது.

நீங்க அரசியலுக்கு வருவீர்களா வரமாட்டீர்களா என்று கேட்காதீர்கள். இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தோம். பேசிக்கிட்டே இருக்கிறீர்களே என்று சொல்லாதீர்கள். நாம் யாரை விட்டு வைத்தோம். 

அரசியல் பிரகடனம் முறையாக எப்போது அறிவிப்பீர்கள்?

அவசரமில்லாமல் பல மேடைகள் உள்ளது , நீங்களும் ஒத்துழைக்கணும். பல விஷயங்கள் உள்ளது. பிறந்த நாளில் அரசியல் அறிவிப்பு எல்லாம் எதற்கு. அது நான் வந்த நாள். நல்ல நாள் ஒன்று புரட்சி நடந்த நாளில் அதுவும் ரஷ்யப் புரட்சி தான் அவசியம்னு இல்ல ஏதாவது ஒரு நாளில் அறிவிப்பேன்.

செப்டம்பர் 17 அன்று அறிவியுங்கள் ?

கண்டிப்பாக எந்த வருடம் என்பது நான் முடிவு செய்வேன்.

இவ்வாறு கமல் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x