Published : 15 Sep 2017 08:11 AM
Last Updated : 15 Sep 2017 08:11 AM

ஓஎன்ஜிசி எண்ணெய் தொட்டியில் தீ: நெடுவாசல் அருகே பொதுமக்கள் பீதி; அதிகாரிகள் சிறைபிடிப்பு

நெடுவாசல் அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் எரிபொருள் சோதனைக்காக அமைக்கப்பட்ட எண்ணெய்க் கழிவுத் தொட்டியில் நேற்று தீப்பற்றியது.

ஓஎன்ஜிசி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லை பகுதியில் எரிபொருள் உள்ளதா என ஆய்வு நடத்த, 2009-ல் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. எண்ணெய்க் கழிவுகளை சேகரிக்க 2 தொட்டிகள் கட்டப்பட்டன. அதில், சுமார் 40 அடி சுற்றளவு உள்ள ஒரு தொட்டியில் சுமார் 5 அடிக்கு எண்ணெய்க் கழிவு சேகரித்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அந்தத் தொட்டியில் இருந்த எண்ணெய் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மயக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு ஒருவித நெடியும் வீசியதாக தெரிகிறது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.

கறம்பக்குடி, கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த கறம்பக்குடி வட்டாட்சியர் எஸ்.சக்திவேல் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை, கிராம மக்கள் சிறைபிடித்தனர். ‘இந்த ஆழ்துளை கிணறு, தொட்டிகளை அகற்றிவிட்டு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்த ஆட்சியர் ஏமாற்றிவிட்டார்.

எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

வடகாடு போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அதிகாரிகளை விடுவித்தனர். விபத்து குறித்தும் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x