Published : 14 Sep 2017 08:52 PM
Last Updated : 14 Sep 2017 08:52 PM

சென்னை திருவல்லிக்கேணியில் நகைக்காக பெண்ணை கொலை செய்த நபர் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து 40 சவரன் நகைகளை கொள்ளையடித்த எதிர் வீட்டு நபர் பன்னீர்செல்வத்தை இன்று போலீஸார் கைது செய்தனர்.

திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பழனியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் கலா(52). இவருக்கு கமல்(35), ஜெயகுமார்(32) என்கிற இரண்டு மகன்கள் உண்டு. கணவர் துரையுடன் பிரச்சினை ஏற்பட்டு பத்தாண்டுகளுக்கு முன்பே கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

கலா வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். மகன்கள் இருவரும் அண்ணாநகரில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கலாவின் மூத்த மகன் கமல் அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பின்னர் மதியம் 2 மணியளவில் தொடர்பு கொண்டபோது கலா செல்போனை எடுக்கவில்லை.

தாயார் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த மகன் கமல் இரவு 11 மணி அளவில் அண்ணாநகரிலிருந்து வீட்டிற்கு வந்து நள்ளிரவு போலீஸார் துணையுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே கலா கொலை செய்யப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 30 சவரன் செயின், 10 சவரன் வளையல் திருடப்பட்டிருந்தது.

கலா வீட்டில் தனியாக இருந்ததால் கொலையாளி கொலை செய்த பின்னர் வீட்டை பூட்டிக்கொண்டு சென்று விட்டார். அண்ணா சதுக்கம் போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 5 க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரித்ததில் எதிர் வீட்டிலுள்ள பன்னீர்செல்வம் என்பவர் சிக்கினார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் கலாவை கொலை செய்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். நகைகளுக்காக கொலை செய்ததாகவும் போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து அவரிடமிருந்த நகைகளை கைப்பற்றியதோடு, பன்னீர்செல்வத்தை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருவல்லிக்கேணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x