Published : 14 Sep 2017 09:03 AM
Last Updated : 14 Sep 2017 09:03 AM

காவிரி மகா புஷ்கரம் விழாவையொட்டி மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: தொடக்க நாளில் 25 ஆயிரம் பேர் புனித நீராடினர்

காவிரி மகா புஷ்கரத்தையொட்டி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் காவிரி மகா புஷ்கரம் விழா மயிலாடுதுறை காவிரி ஆற்றில் துலாக் கட்டத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது. காஞ்சி சங்கராச்சாரியார்கள், தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்கள் உள்ளிட்டோர் தொடங்கி வைத்த இந்த விழா வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

25 ஆயிரம் பேர் நீராடினர்

துலாக் கட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி இரவு வரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடிய நிலையில், நேற்று 2-வது நாளாக ஆயிரக்கணக்கானோர் நீராடினர்.

அதிகாலையில் இருந்தே பக்தர்கள் துலாக் கட்ட காவிரிக்கு வர ஆரம்பித்தனர். காலை 10 மணிக்குப் பிறகு கடுமையான வெயில் நிலவியதால், சிறிதுநேரம் கூட்டம் குறைவாக இருந்தது. மாலை மீண்டும் அதிக அளவிலான மக்கள் நீராடிச் சென்றனர்.

வியப்பூட்டிய ஆஸ்திரேலியர்கள்

புனித நீராட வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் நேற்று வந்திருந்தனர். ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் 10 பேர் துலாக் கட்டத்துக்கு வந்து, காவிரியின் பெருமையை ஆங்கிலத்தில் அங்கிருந்த மக்களுக்குச் சொல்லி, ஆச்சரியமூட்டினர். மேலும், அவர்கள் காவிரியாற்றின் நீர்த்தேக்கத்தில் நீராடி, காவிரித் தாயை வணங்கிச் சென்றனர்.

தண்ணீர் திறப்பு

காவிரி மகா புஷ்கரம் விழாவையொட்டி, பக்தர்கள் புனித நீராடுவதற்காக நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீர் திறக்கப்பட்டு படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. காவிரியில் கூடுதலாக நீர் திறக்கப்படுவது குறித்து சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதனிடையே, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 16,441 கனஅடியாக இருந்தது. நேற்று காலை 10,165 கனஅடியாக குறைந்தது. நேற்று காலை அணை நீர்மட்டம் 77.30 அடியாகவும், நீர் இருப்பு 39.35 டிஎம்சி-யாகவும் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x