Published : 13 Sep 2017 05:49 PM
Last Updated : 13 Sep 2017 05:49 PM

திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது: ரத்து கோரும் வழக்கு செப்.19 க்கு தள்ளி வைப்பு

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 23 ஆம் சென்னை மெரினாவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையை கண்டித்து நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார்.

ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி மெரினாவில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை, காவல்துறை அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்திய திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று நீதிபதிகள் ஏ. செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் வழக்கின் தீர்ப்பை வரும் 19 ஆம் தேதி அளிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்த இதழியல் மாணவி வளர்மதி. கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டம் போடப்பட்டதையடுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை கடந்த வாரம் உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து அவர் விடுதலையானார்.

இதே போன்று திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டமும் ரத்து ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x