Last Updated : 12 Sep, 2017 08:21 AM

 

Published : 12 Sep 2017 08:21 AM
Last Updated : 12 Sep 2017 08:21 AM

பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் பழனிசாமி அரசு: விரைவில் ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு?

எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல், அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு வாபஸ் உள்ளிட்ட சிக்கல்களுக்கிடையில் விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின் றனர்.

சமீபத்தில் தினகரன் தலைமையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை எம்எல்ஏக்கள், எம்பிக்கள் குழுவினர் சந்தித்தனர். அப்போது, எம்எல்ஏக்கள் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறியதாக தினகரன் தெரிவித்தார். ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார். அதிமுக தோழமைக் கட்சி எம்எல்ஏவான தமிமுன் அன்சாரி, முதல்வர் பழனிசாமி, தினகரன் இருவருக்குமே தனது ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளார். கொங்கு இளைஞர் பேரவையின் உ.தனியரசுவோ, ஆட்சிக்கு ஆதரவு என்று நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்து, முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு 2 முறை முறையிட்டுள்ளனர். எதிர்ப்பு, நடுநிலை என்ற வகையில் முதல்வர் பழனிசாமிக்கு தற்போது 112 பேர் ஆதரவே உள்ளது. பெரும்பான்மைக்கு 117 பேர் தேவை. இதைக் கருத்தில் கொண்டும், எதிர்க்கட்சி கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் விரைவில் உத்தரவிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

15-ல் ஆளுநர் வருகை

ஆளுநர் வித்யாசாகர் ராவ், நேற்று காலை 11 மணிக்கு மும்பை புறப்பட்டுச் சென்றார். அவர் மீண்டும் 15-ம் தேதி சென்னை திரும்புகிறார். அதன்பின், ஒருநாள் சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிடலாம் என்றும், அவ்வாறு பேரவை கூட்டப்படும்போது, முதல்வர் பழனிசாமியே நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவந்து, தங்கள் பலத்தை நிரூபிக்கலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

எதற்கும் தயார்

ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், அதற்கும் முதல்வர் பழனிசாமி தரப்பு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை செப்.14-ம் தேதி நேரில் ஆஜராக பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார். அன்று அவர்கள் வருவதற்கு முன்னரே தங்கள் பக்கம் இழுக்க முதல்வர் பழனி சாமி தரப்பு திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே பழனிசாமிக்கு ஆதரவளித்த எஸ்டிகே ஜக்கையன் மூலம், இரு மனநிலையில் உள்ளவர்களை வளைக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் அமைச்சர் பி.தங்கமணி, ஜக்கையன் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x