Last Updated : 11 Sep, 2017 11:34 AM

 

Published : 11 Sep 2017 11:34 AM
Last Updated : 11 Sep 2017 11:34 AM

12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பும் சின்னாறு அணை, நிரம்பி வழிகிறது தளி பெரிய ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணைக்கு, 12 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 2005-ம் ஆண்டுக்குப் பின்னர் தளி பெரிய ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதி மக்களின் விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் 1985-ம் ஆண்டு ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் சின்னாறு அணை கட்டப்பட்டது. சின்னாறு, பேரிகை ஏரி, பன்னப்பள்ளி ஏரி, அத்திமுகம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து வரும் தண்ணீர் சின்னாறு அணையில் சேமித்து வைக்கப்பட்டு விவசாயத்திற்கு திறந்துவிடப்படுவது வழக்கம்.

அணையின் மொத்த உயரமான 37 அடியில் 33 அடிக்கு தண்ணீர் வந்தால், அணையின் இடதுபுறம் உள்ள மாரண்டப்பள்ளி, கிருஷ்ணகவுன்பள்ளி, தாசம்பட்டி, இண்டிகானூர் கிராமங்களும், வலதுபுறம் வேம்பள்ளி, கூரக்கனப்பள்ளி, கொள்ளப்பள்ளி, சென்னப்பள்ளி, சுண்டகிரி, அலகுபாவி, எலசமாக்கனப்பள்ளி, சின்னசென்னப்பள்ளி, பந்தர்குட்டை, கரகண்டப்பள்ளிஉள்ளிட்ட கிராமங்களுக்கும் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

நீர்வழித்தட ஆக்கிரமிப்பு, போதிய மழையின்மையால் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னாறு அணை வறண்டு கிடந்தது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று பிற்பகல் நிலவரப்படி சின்னாறு அணையில் 29.50 அடிக்கு தண்ணீர் உள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘கெலவரப்பள்ளி அணையில் இருந்து துரை ஏரி வழியாக சின்னாறு அணைக்கு தண்ணீர் விட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. தற்போது பெய்த மழையால் அணை நிரம்பி வருவதால், இப்பகுதியில் விவசாயம் புத்துயிர் பெற்றுள்ளது. இருப்பினும், துரை ஏரியிலிருந்து கால்வாய் நீட்டிப்பு செய்து, சின்னாறு அணைக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

தளி பெரிய ஏரி

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு தளி பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. இதனால் தளி ஒன்றியத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகளில் 100 சதவீதம் அளவுக்கு தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதில் குறிப்பாக 120 ஏக்கர் பரப்பளவுள்ள தளி பெரிய ஏரி முழுவதுமாக நிரம்பி வழிகிறது.

கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு தளி பெரிய ஏரியில் தற்போது தான் 100 சதவீதம் அளவில் நீர் மட்டம் உயர்ந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் தளி ஒன்றியத்தில் உள்ள கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x