Published : 11 Sep 2017 11:33 AM
Last Updated : 11 Sep 2017 11:33 AM

கிணத்துக்கடவு அருகே 30 ஆண்டுகளுக்கு பின் மழை நீர் தேங்கிய குளம்

கோதவாடி குளத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் தேங்கியுள்ள மழை நீரால், கிணத்துக்கடவு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே, 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோதவாடி குளம் உள்ளது. இக்குளம் 11.07 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இப்பகுதியில் பெய்யும் மழைநீரை மட்டுமே நீர் ஆதாரமாக கொண்டுள்ள இக்குளத்துக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மழைகள் சரியாக கிடைக்கும்பட்சத்தில், குளத்தின் ஓர் ஆண்டு மொத்தக் கொள்ளளவு 33.21 மில்லியன் கன அடி ஆகும். இந்த குளத்தில் நீர் நிறைந்து இருக்கும் போது, நேரடியாக 312 ஏக்கரும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் கிணத்துக்கடவைச் சுற்றியுள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும், குளத்தில் இருந்து வெளியேறிச் செல்லும் தண்ணீரால், கேரளா மாநில எல்லை வரை பலநூறு ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.

தூர்ந்து கிடப்பதால்...

கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக்கு இக்குளம் நிறைந்து இருக்க வேண்டும். பனப்பட்டி, மன்றாம்பாளையம், பொன்னாக்காணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து இக்குளத்துக்கு வரும் நீர்வழித்தடங்கள் தூர்ந்து கிடப்பதால், மழைநீர் முழுமையாக குளத்தை வந்து அடைய இல்லை. இதனால் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் குளம் நிரம்பும் வாய்ப்பு கிடைத்தும் தற்போது குளத்தின் ஒரு பகுதியில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது.

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘இக்குளத்தை தூர்வாரும் பணி முழுமையாக மேற்கொள்ளப்படாததால் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழைநீர், குளத்துக்கு முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோதவாடி குளத்தில் தற்போது சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இக்குளத்துக்கு வரும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், குளத்தை முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். இதனால் வரும் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கினால் இக்குளத்துக்கு நீர் வரத்து அதிகம் இருக்கலாம். கிணத்துக்கடவைச் சுற்றியுள்ள மானாவாரி விவசாய நிலங்கள் பயன்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x