Published : 11 Sep 2017 09:55 AM
Last Updated : 11 Sep 2017 09:55 AM

25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழகத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு திமுக ஆட்சி அமையும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற முன்னாள் எம்எல்ஏ காமராஜ் மகன் ரமேஷ்குமார் திருமண விழாவில் அவர் பேசியதாவது:

திமுகவைப் பொறுத்தவரை உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. இன்று திமுக மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்களில் பலர் அதிமுகவில் இருந்தவர்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எஸ்.ரகுபதி, முத்துசாமி, பி.கே.சேகர்பாபு ஆகியோரின் பணிகளைப் பார்த்து திமுகவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முன்னாள் எம்எல்ஏ காமராஜும் இடம் பெறுவார். இடம்பெற வேண்டும் என விரும்புகிறேன்.

இந்த திருமண விழாவுக்கு பத்திரிகையாளர்கள் திரண்டு வந்துள்ளனர். இங்கு மட்டுமல்ல. நான் எங்கு சென்றாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. நாமும், பொதுமக்களும் மட்டுமல்ல, பத்திரிகையாளர்களும் இந்த ஆட்சி எப்போது கலையும் என காத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒரு நிலையற்ற ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆதரவை திரும்பப் பெறுவதாக 19 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் நேரில் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனாலும், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவில்லை.

ஆட்சி கலைப்பு கோரவில்லை

ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலிடத்தில் இருந்து வந்துள்ள உத்தரவே இதற்கு காரணம். மத்திய பாஜக அரசின் உத்தரவால் பெரும்பான்மை இழந்துவிட்ட பிறகும் இந்த அரசு தொடர்கிறது. திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுகவை அசைக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அது உண்மைதான். அடுத்து 25 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு திமுக ஆட்சி அமையும்.

எனவே, திட்டமிட்டு சதி செய்து குறுக்கு புத்தியுடன், குறுக்கு வழியில் பல செயல்களை செய்து வருகின்றனர். தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பற்றவே திமுக ஆட்சிக்கு வர விரும்புகிறது. நீட் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்திலும் தமிழகத்தின் நலன்களையும், சுயமரியாதையும் இந்த அரசு அடகு வைத்துவிட்டது. இந்த நிலையில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x