Published : 07 Sep 2017 09:23 AM
Last Updated : 07 Sep 2017 09:23 AM

ஆதரவு எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரை இன்று சந்திக்கிறார் தினகரன்: தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு

அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று பகல் 12.30 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார். சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் தினகரன் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

21 எம்எல்ஏக்கள் ஆதரவு

அதிமுக இரு அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர், டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த 19 எம்எல்ஏக்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாகக் கூறி தனித்தனியாக கடிதம் அளித்தனர். பின்னர் மேலும் 2 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி - தினகரன் இடையே மோதல் வலுத்து வருகிறது. நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி தினகரனை நீக்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதே நேரத்தில், பழனிசாமி ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை தினகரன் தொடர்ந்து நீக்கி வருகிறார். முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும். துணை முதல்வர் ஓபிஎஸ் விலக வேண்டும் என 21 எம்எல்ஏக்களும் உறுதியாக இருப்பதாக தினகரன் தரப்பு கூறி வருகிறது.

இதனிடையே, முதல்வர் பழனிசாமி அணியினர் இரண்டாவது தடவையாக நேற்று முன்தினம் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினர். அதில் 109 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். ஆனால், தங்களுக்கு 111 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், தினகரன் அணியில் உள்ள 9 பேர் முதல்வர் பழனிசாமியை ஆதரிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதை தினகரன் அணியினர் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று பகல் 12.30 மணிக்கு டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சந்தித்துப் பேசுகிறார். அப்போது 21 எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, சட்டப்பேரவையைக் கூட்டி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

அதன்பிறகும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தினகரன் அறிவிப்பார் என அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளுநரை தினகரன் சந்திக்கவுள்ளதையடுத்து தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பாகி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x