Published : 03 Sep 2017 12:24 PM
Last Updated : 03 Sep 2017 12:24 PM

திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; ஒரு குழந்தை உட்பட இருவர் உயிருடன் மீட்பு

திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ளது தஞ்சாவூர் குளத்தெரு. இப்பகுதியில் உள்ள 3 தளங்கள் கொண்ட குடியிருப்பு ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.50 மணியளவில் இடிந்துவிழுந்தது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலியாகினர். பலியான சிறுவன், சிறுவனின் தந்தையின் சடலம் இடிபாடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதுவரை ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட கைக்குழந்தை அங்காள பரமேஸ்வரிக்கு சிறு காயம்கூட ஏற்படவில்லை. ஆனால் குழந்தையின் தந்தை பழனி பரிதாபமாக பலியானார்.

விபத்து பகுதியில் தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர். மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

விபத்து ஏன்?

விபத்து குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர், "திருச்சியில் நேற்று இரவு கடும் மழை பெய்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வீட்டுக்கு அருகே இருந்த கட்டிடம் ஒன்று அண்மையில் இடிக்கப்பட்டது. அந்த கட்டிடம் இடிக்கப்பட்டதால் தற்போது காலியிடமாக உள்ளது. இடிக்கப்பட்ட கட்டிடத்தின் ஒரு பக்க சுவரும் இடிந்துவிழுந்த கட்டிடத்தின் சுவரும் ஒன்றாகவே இருந்துள்ளது. இந்நிலையில் அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டதால் இக்கட்டிடம் வலுவிழந்திருக்கிறது. இந்நிலையில்தான் மழை பெய்ததால் கட்டிடம் மேலும் வலுவிழந்து கீழே விழுந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x