Published : 03 Sep 2017 08:55 AM
Last Updated : 03 Sep 2017 08:55 AM

புதுச்சேரி சொகுசு விடுதியில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தினகரன் சந்திப்பு: ஓரிரு நாட்கள் காத்திருப்போம் என தகவல்

புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தனது ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். எம்எல்ஏக்களை யாரும் இங்கு அடைத்து வைக்கவில்லை என்று கூறிய தினகரன், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்கப் போவதாக தெரிவித்தார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் புதுச்சேரி அடுத்த சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் கடந்த 12 நாட்களாக தங்கியுள்ளனர். தினகரன் அவர்களை நேரில் வந்து சந்திக்கப் போவதாக கடந்த ஒரு வாரமாக கூறி வந்த நிலையில், அவர் நேற்று புதுச்சேரி வந்தார். சொகுசு விடுதியில் எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர் தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அமர வைத்த முதல்வர் கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் செய்துவிட்டார். அதே போன்று கட்சிக்கு துரோகம் செய்து வெளியே சென்ற பன்னீர்செல்வத்தை கூட்டணி சேர்த்துக்கொண்டனர். கட்சிக்குத் துரோகம் செய்து முதல்வரான பழனிசாமி எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்? இதனால்தான் எங்களின் எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என கூறி வருகின்றனர்.

யாரையும் அடைத்து வைக்கவில்லை

தங்கள் சுயநலத்துக்காகவோ, சுய லாபத்துக்காகவோ எம்எல்ஏக்கள் இங்கு தங்கியிருக்கவில்லை. கட்சியைக் காப்பாற்ற வேண்டும். துரோகத்தை ஒழித்து ஒரு நல்ல தலைமையை உருவாக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தையும், தொகுதியையும் விட்டு வந்து இங்கே தங்கியுள்ளனர். அதனால்தான் அனைவரும் ஒற்றுமையாக இவ்வளவு நாட்கள் தங்கியிருக்கின்றனர். எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதால், சமாதானம் செய்வதற்காக நான் வந்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதற்காக நான் வரவில்லை. தினமும் அவர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறேன். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் குடியரசுத் தலைவரும், ஆளுநரும் தலையிட வேண்டும் என வலியுறுத்ததான் எம்எல்ஏக்கள் இங்கு இருக்கிறார்கள். இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருப்போம். இல்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்.

தமிழகத்துக்கு நீட் தேவையில்லை

தொடர்ந்து, அனிதா மரணம் மற்றும் நீட் தேர்வு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தினகரன், “நீட் இல்லையென்றால் அவருக்கு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்திருக்கும். நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவை இல்லை. நீட் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் பதவி விலகினால் போதாதது முதல்வரும், துணை முதல்வரும் பதவி விலக வேண்டும். நாங்கள் அனைத்தையும் மாற்றி விடுவோம்.

மக்கள் ஏற்க மாட்டார்கள்

கடந்த காலங்களில் இங்கே மருத்துவம் படித்தவர்கள் எல்லாம். உலக அளவில் புகழ்பெற்று எப்படி இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக மக்கள் என்றைக்கும் தாங்கள் விரும்பாததை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நேரு காலத்தில் இந்தியை திணித்தார்கள். தமிழக மக்கள் ஏற்கவில்லை.

மத்திய அரசு வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் தேவை என்ன, கோரிக்கை என்ன என்பதை உணர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியும், 69 சதவீத இடஒதுக்கீடும் உள்ள தமிழகத்தில் இது போன்ற விபரீத சம்பவங்கள் எல்லாம் நடைபெறுகிறது’’ என்று கூறினார்.

சமாதானத்தை ஏற்பீர்களா?

‘முதல்வர் பழனிசாமி தரப்பில் இருந்து சமாதானத்துக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதுபற்றி பேச வேண்டிய நேரம் இதுவல்ல; எடப்பாடி வீட்டுக்கு போக வேண்டிய நேரம் இது’’ என்று கூறினார்.

‘பொதுக்குழுவை நீங்கள் கூட்டுவீர்களா?’’ என்று கேட்டதற்கு, “நாங்கள் எப்போது கூட்டுவோமோ அப்போது கூட்டுவோம். கட்சியின் பொதுச் செயலாளர் (சசிகலா) எப்போது முடிவு செய்து கூறுகிறாரோ அப்போது செய்வோம். அவர்கள் கூட்டுவது பொதுக்குழுவே இல்லை. எடப்பாடி தலைமையில் கூட்டப்படும் பொதுக்குழுவில் கலந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

முன்னதாக புதுச்சேரிக்கு வந்த தினகரனுக்கு கோட்டக்குப்பம் சந்திப்பிலும், மரப்பாலம் சந்திப்பிலும் பின்னர் ரிசார்ட்டிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x