Published : 02 Sep 2017 05:04 AM
Last Updated : 02 Sep 2017 05:04 AM

மருத்துவராகும் கனவை தகர்த்த நீட் தேர்வு: அரியலூர் மாணவி அனிதா தற்கொலை

சோகத்தில் மூழ்கிய கிராமம்; கொதித்தெழுந்த மாணவர்கள் ; மாநிலத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் ; இன்று கடையடைப்பு

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தம் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.

கிடைக்கும் மிகச் சொற்பமான வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார் சண்முகம். மகள் அனிதா (17) படிப்பில் சிறந்த மாணவியாக திகழ்திருக்கிறார். தான் ஒரு மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பது அவரது லட்சியமாக இருந்துள்ளது. சிறு வயது முதலே அதே கனவுடன் படித்தார்.

அதற்காக கடுமையாக உழைத்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றார். இவரது மருத்துவ கட்- ஆஃப் 196.7 மதிப்பெண்கள். இந்நிலையில் மருத்துவப் படிப்பில் சேர மத்திய அரசு இந்த ஆண்டு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. நீட் தேர்வுக்காக உரிய பயிற்சியோ அல்லது சிறப்பு வகுப்பில் சேர்ந்து படிப்பதற்கான வசதியோ இல்லாத நிலையில், நீட் தேர்வை எழுதினார். அதில் 86 மதிப்பெண்களே கிடைத்தது.தனது கனவு மீது இடி விழுந்ததால் சோகத்துடனே இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாலை மறியல்

அனிதா இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குழுமூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் க.லட்சுமி பிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்குமார் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை

இதைத் தொடர்ந்து குழுமூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அனிதாவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. தகவலறிந்து மருத்துவமனையில் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு, குழுமூரில் அனிதாவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. இதில், பல்வேறு கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

அனிதா தற்கொலை செய்து கொண்டதால், அனிதாவின் உறவினர்கள் மட்டுமன்றி, அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியது.

இன்று கடையடைப்பு

அனிதாவின் மரணம் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் தன்னெழுச்சியாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீட் தேர்வு எதிர்ப்புக் குழு சார்பில் இன்று அரியலூர் மாவட்டத்தில் கடையடைப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் அனிதா தன்னையும் இணைத்துக் கொண்டு, வழக்கை எதிர்கொண்டார். சட்டப் போராட்டம் நடத்திய மாணவி ஒருவரே நுழைவுத் தேர்வால் படிப்பை தொடர முடியாமல் தற்கொலை செய்துகொண்டது கவலைக்குள்ளாக்கியுள்ளது.

அனிதாவின் தாயார் ஆனந்தம் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். அனிதாவுக்கு 4 சகோதரர்கள். மூத்தவர் மணிரத்தினம் (ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வருகிறார்), சதீஷ்குமார் (வங்கியில் கடன் வசூலிப்பாளராக பணியாற்றி வருகிறார்), பாண்டியன் மற்றும் அருண்குமார் ஆகியோர் பி.இ. படித்து வருகின்றனர். அனிதா தனது பாட்டி வீட்டிலேயே வளர்ந்து வந்தார். அனிதாவின் தந்தை சண்முகம் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட வாசுகி என்பவருக்கு கார்த்திகா என்ற 7 வயது மகள் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x