Published : 01 Sep 2017 04:29 PM
Last Updated : 01 Sep 2017 04:29 PM

நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை

நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

அரியலூர் குழுமூரைச் சேர்ந்தவர் அனிதா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சண்முகம் கூலித் தொழிலாளி.

பிளஸ் 2 தேர்வில் இவர் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழந்தார். நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே அவர் எடுத்திருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) தற்கொலை செய்துகொண்டார்.

சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அனிதா தனது கனவு தகர்ந்ததால் மன அழுத்தத்தில் இருந்தார். மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என அனிதாவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்..

நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சில மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர். நீட் ஆதரவு மாணவர்களுக்காக நளினி சிதம்பரம் ஆஜரானார். இந்த வழக்கில் எதிர் மனுதாரராக அனிதா சேர்க்கப்பட்டிருந்தார்.  "நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்கு மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்" என உச்ச நீதிமன்றத்தில் அனிதா மனு அளித்தார்.

தற்கொலை தீர்வாகாது..

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. போராட்ட குணமே மனிதனின் சிறப்பு இயல்பு. எனவே, எல்லாப் பிரச்சினைகளுக்கும் போராடி தீர்வு காண முடியும் என்ற மன உறுதியுடன் மாணவர்கள் இருக்க வேண்டும் என மனநல ஆலோசகர் கூறினார்.

மனபலம் தேவை: மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் கூறுகையில், "தோல்வி என்பது தற்காலிக பிரச்சினையே அதற்கு நிரந்தரத் தீர்வாக தற்கொலையை பல இளைஞர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.  பிரச்சினையை சமாளிக்கும் மனபலம் இல்லாததாலேயே இத்தகைய முடிவை எடுக்கின்றனர். மன அழுத்தத்தில் இருக்கும்போது இதுபோன்ற தற்கொலை எண்னம் மேலோங்கும். ஏதோ ஒரு புள்ளியில் அது செயல்வடிவம் பெற்றுவிடும்.

பெற்றோரும், பள்ளிக்கூடமும் மாணவர்கள் மத்தியில் எழும் தற்கொலை எண்ணத்தை தடுக்க முடியும் தோல்வியை தாங்க முடியாத குழந்தையை ஆசிரியர்கள் எளிதில் கண்டறிய முடியும். அத்தகைய குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கலாம். தேவைப்பட்டால் மனநல ஆலோசகரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம். ஏமாற்றம் என்பதை சந்திக்காமலேயே தங்கள் குழந்தையை வளர்ப்பதே நல்ல பெற்றோருக்கு அழகு என பலரும் கருதுகின்றனர். ஆனால், ஏமாற்றம் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை அவர்களை உணர வைக்க வேண்டும். அதுவே சிறந்த குழந்தை வளர்ப்பு முறை. தற்கொலை எண்ணம் மேலோங்கும்போது அவற்றைத் தடுப்பதற்காக உள்ள ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

இலவச உளவியல் ஆலோசனை

தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின் தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060 நேரடியாக காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஆலோசனை பெறலாம். முகவரி: 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028

மின்னஞ்சல் தொடர்புகொள்ள: help@snehaindia.org

புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, மின்னஞ்சல் முகவரி: bimaitreyi@rediffmail.com. நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அணுகலாம். முகவரி: 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x