Published : 01 Sep 2017 10:18 AM
Last Updated : 01 Sep 2017 10:18 AM

அதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் எதிர்ப்பு; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

 

அதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அதிமுக அணிகள் இணைப்புக்குப் பின்னர் டிடிவி தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் போர்க்கொடி தூக்கிவருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 12-ம் தேதி (செப்டம்பர் 12) அன்று வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக பொதுக்குழு வரும் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான கடிதத்தில் தலைமை கழகம், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி கடிதத்தில் யாருடைய கையொப்பமும் இல்லை. மேலும் என்ன நோக்கத்திற்காக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டப்படுகிறது என்பது பற்றியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவில்லை.

கழகத்தின் சட்ட திட்ட விதிமுறை 20 பிரிவு 6-ன் படி பொதுக்குழுவையும், செயற்குழுவையும் கழகத்தின் பொதுச் செயலாளர் மட்டுமே கூட்ட முடியும்.

கழகத்தின் சட்ட திட்ட விதிமுறை 19 பிரிவு 7-ன் படி பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்தில் ஒரு பகுதி என்ணிக்கையினர் கையெழுத்திட்டு கேட்டுக்கொண்டால், பொதுக்குழுவின் தனிக் கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் பொதுச் செயலாளர் கூட்ட வேண்டும். ஆகவே 12.09.2017 தேதியிட்ட கூட்டம் தொடர்பான அறிவிப்பிற்கும் நமது கழகத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளின் படி கூட்டப்படும் பொதுக்குழு மற்றும் செயற்கு கூட்டங்களுக்கு மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, கழகத்தின் உண்மைத் தொண்டர்கள் எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். மீறி கலந்து கொள்ளும் கழக உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

12-ம் தேதியன்று பொதுக்குழுவை கூட்டுவதாக சட்டத்துக்கு புறம்பான அறிவிப்பை செய்த நபர்களின் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கையை தொடர உள்ளேன்.

கழக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x