Published : 30 Aug 2017 08:29 AM
Last Updated : 30 Aug 2017 08:29 AM

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருடன் நாளை சந்திப்பு: பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்துகின்றனர்

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை (ஆகஸ்ட் 31) சந்திக்க இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். முரசொலி பவள விழா மலரை அவர்களுக்கு ஸ்டாலின் வழங்கினார். திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நடவடிக்கை இல்லை

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

அதிமுகவின் 19 எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்பப் பெற்றதால் முதல்வர் கே.பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதினோம். நேரிலும் வலியுறுத்தினோம். ஆனாலும், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். 31-ம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால், சந்திப்புக்கான நேரம் உறுதி செய்யப்படவில்லை. எப்படியும் 31-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்திப்பார்கள். அப்போது அவரிடம் தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சினைகள் குறித்து முறையிடுவார்கள்.

உரிமைக் குழு நோட்டீஸ்

புற்றுநோய் வருவதற்கு காரணமான குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல் துறை அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து இவை விற்கப்பட்டு வருகின்றன. இதை ஆதாரத்தோடு நிரூபிப்பதற்காக சட்டப்பேரவையில் நாங்கள் காண்பித்தது உண்மைதான்.

ஆனால், அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, 40 நாட்களுக்குப் பிறகு உரிமைக் குழு கூடி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இன்றுகூட குட்கா விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

19 எம்எல்ஏக்கள் வாபஸ்

அதிமுக அணிகள் இணைந்த பிறகு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் அளித்தனர். அவர்கள் ஆளுநரை சந்தித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கடிதம் அனுப்பியிருந்தனர்.

அதைத் தொடர்ந்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, காங்கிரஸ் கொறடா எஸ்.விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபூபக்கர் ஆகியோர் கடந்த 27-ம் தேதி ஆளுநரைச் சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல, ஆளுநரை நேற்று காலை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

இந்தச் சூழலில் திமுக மட்டுமல்லாது காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், ஆளுநரின் தாமதம் குறித்தும் முறையிட இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இடைநீக்கம் செய்ய வாய்ப்பு

கடந்த ஜூலை 19-ம் தேதி சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, பான்மசாலா பாக்கெட்களை ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் காண்பித்தனர். 40 நாட்களுக்குப் பிறகு இப்பிரச்சினையை பேரவை உரிமைக் குழு நேற்று முன்தினம் விசாரித்து ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேருக்கும் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

அவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டால் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் இது பழனிசாமி அரசுக்கு சாதகமாக அமையும். இது தொடர்பாகவும் குடியரசுத் தலைவரிடம் திமுக எம்.பி.க்கள் புகார் தெரிவிக்க உள்ளனர்.

ஆளுநருடன் இன்று சந்திப்பு

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர். அப்போது தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் குறித்து பேசுவதுடன், பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்த உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x