Published : 24 Aug 2017 03:05 PM
Last Updated : 24 Aug 2017 03:05 PM

நான் அதிமுகவில்தான் இருக்கிறேன்; தனி அணியில் இல்லை: எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

நான் அதிமுகவில்தான் இருக்கிறேன், தனி அணியில் இல்லை என்று பெருந்துறை எம்எல்ஏ தோப்பு என்.டி. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வர் பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வந்தார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம். இந்நிலையில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் போர்க்கொடி தூக்கியபோது, அவரது ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொண்டார். தோப்பு வெங்கடாசலத்தை கட்சியின் அமைப்புச் செயலாளராக தினகரன் அறிவித்தார்.

அதன்பின், தினகரன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றதோடு, மதுரை மேலூரில் தினகரன் நடத்திய பொதுக் கூட்டத்திலும் தோப்பு வெங்கடாசலம் பங்கேற்றார். ஆனால், கடந்த ஒரு வாரமாக அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வந்தபோது, தினகரன் தலைமையில் நடந்த ஆலோசனைகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நான் அதிமுகவில்தான் இருக்கிறேன், தனி அணியில் இல்லை. அனைத்து எம்எல்ஏக்களின் கருத்துகளையும் முதல்வரும் துணை முதல்வரும் கேட்க வேண்டும். டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களிடமும் அவர்கள் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் டிடிவி தினகரனைப் அழைத்து பேச வேண்டும். டிடிவி ஆதரவாளர்கள் மனு கொடுத்த போது நான் உடன் செல்லவில்லை.

அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே எனது எண்ணமும் மற்றும் தொண்டர்களின் எண்ணமும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x