Published : 24 Aug 2017 12:22 PM
Last Updated : 24 Aug 2017 12:22 PM

அமைச்சர்கள் சொன்ன நல்லது இதுதானா?- நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஸ்டாலின் கேள்வி

முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்லி வரை சென்று, நல்லதுதான் நடக்கும் என்று தொடர்ந்து அளித்த வாக்குறுதி இதுதானா என்று நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாத சூழ்நிலையில், நீட் அடிப்படையில் தமிழக அரசின் மருத்துவ கலந்தாய்வை எதிர்த்து திமுக சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், ''நீட் தேர்வு முறையால் தமிழகத்தின் சமூக நீதிக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இட ஒதுக்கீட்டுக் கொள்கை நசுக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த முயற்சியை தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழக அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். அதற்கு யாரிடமும் பதில் இல்லை. ப்ளஸ் 2 தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தும் அளவுக்கே மாநில பாடத்திட்டம் உள்ளது.

இது நீட் பிரச்சினை மட்டுமல்ல, மாணவர்களின் பிரச்சினை மட்டுமல்ல, மாநில உரிமைகளின் பிரச்சினை என்று தொல்.திருமாவளவன் கூறினார். மத்திய அரசிடம் இருந்து மாநில சுயாட்சியைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

'மருத்துவர் ஆவதை பாஜக விரும்பவில்லை'

திமுக ஆட்சியில் இருந்தவரை, நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடவில்லை. பேரவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நீட் தீர்மானத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. கிராமப்புற மாணவர்கள் மருத்துவர் ஆவதை பாஜக விரும்பவில்லை.

ஓராண்டுக்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வாக்குறுதி நிறைவேறவில்லை.

'அந்த நல்லது இதுதானா?'

முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்லி வரை சென்று, நல்லதுதான் நடக்கும் என்று தொடர்ந்து வாக்குறுதி அளித்தனர். அந்த நல்லது இதுதானா?

மாணவர்களின் சாபம் உங்களை சும்மா விடாது; அவர்களின் சாபத்தோடு உங்களால் நீண்ட காலம் ஆட்சியில் இருக்க முடியாது. இதனால் ஆட்சிக்கு வரத் திட்டமிடுகிறோமோ என்று எண்ண வேண்டாம். கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க ஒரு நாளும் முன்வர மாட்டோம்.

'சபதம் ஏற்போம்'

மத்திய அரசிடம் அடி பணிந்து நிற்கும் குதிரைபேர ஆட்சியை விலக்கினால் மட்டுமே நாட்டுக்கு நல்லது நடக்கும். இதையே சபதமாக ஏற்று உறுதி கொள்வோம்'' என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x