Published : 24 Aug 2017 09:07 AM
Last Updated : 24 Aug 2017 09:07 AM

கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு: 2004 மக்களவைத் தேர்தல் போல மெகா கூட்டணி அமைக்க ஸ்டாலின் வியூகம்

கடந்த 2004 மக்களவைத் தேர்தலைப் போல திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வியூகம் அமைத்து வருகிறார்.

2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 பேரவைத் தேர்தல் என தொடர்ந்து 3 தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்தது. கடந்த 2016 தேர்தலில் நூலிழையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது. இது திமுக தொண்டர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அசாதாரண சூழல்

ஜெயலலிதா மறைவால் அதிமுகவிலும், தமிழக அரசிலும் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையைப் பயன்படுத்தி தேர்தல் வரும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற குரல் திமுகவுக்குள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

2001 பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து 2004 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைக் கொண்டு அதிமுக - பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை திமுக தலைவர் கருணாநிதி உருவாக்கினார். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது.

2011, 2014, 2016-ல் வலுவான கூட்டணி இல்லாததே தோல்விக்கு காரணம் என்ற கருத்து திமுகவினர் மத்தியில் உள்ளது. கடந்த 2016-ல் கடைசி நேரத்தில் கூட்டணி முயற்சிகள் மேற்கொண்டதால் தேமுதிக, இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது.

எனவே, இனிவரும் தேர்தலில் அது சட்டப்பேரவைத தேர்தலாக இருந்தாலும், 2019 மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் 2004 போல மெகா கூட்டணி அமைக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வியூகம் அமைத்து வருகிறார்.

தலைவர்களுடன் சந்திப்பு

அதனால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் அவர் இணக்கமான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், திமுகவுக்கு திருமாவளவன் உறுதுணையாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். கடந்த 10, 11 தேதிகளில் நடைபெற்ற முரசொலி பவள விழாவில் இடதுசாரி, விசிக தலைவர்கள் பங்கேற்றனர்.

வைகோவுடன் நட்பு

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் சந்தித்து நலம் விசாரித்தார். அவரை வாயில் வரை வந்து ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார்.

திமுகவை குறிப்பாக ஸ்டாலினை கடுமையாக எதிர்த்து வந்த வைகோ, திமுகவுடன் நட்பு பாராட்டுவது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை திமுக கூட்டணிக்கு வருவது உறுதியாகி உள்ளது. தற்போது வைகோவும் திமுகவை நெருங்கி வர ஆரம்பித்துள்ளார். மெகா கூட்டணி அமைக்கும் ஸ்டாலினின் வியூகம் வெற்றியடைந்து வருவதாக திமுகவினர் நம்பிக்கை தெரிவிக் கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x