Published : 24 Aug 2017 09:05 AM
Last Updated : 24 Aug 2017 09:05 AM

தினகரனை சமாதானப்படுத்த பழனிசாமி அணி தீவிர முயற்சி: கொங்கு மண்டல மூத்த அமைச்சர்கள் இருவர் களமிறங்கினர்

தினகரனை சமாதானப்படுத்த முதல்வர் பழனிசாமி அணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் சமீபத்தில் இணைந்தன. அணிகள் இணைப்பின்போது, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தினகரன் தரப்பு அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், ஆளுநரை சந்தித்து பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர். இதைத்தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினகரன் அணிக்கு 19 எம்எல்ஏக்கள் சென்றுவிட்ட நிலையில், தற்போது பழனிசாமி அரசுக்கு 116 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டது. அதிலும், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளதால், தற்போது 113 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. ஒரு வேளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி வந்தால் 117 பேர் ஆதரவு வேண்டும். இந்த இக்கட்டான சூழலில், நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி, ஒபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், கூவத்தூர் பாணியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் 18 பேர் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். வெற்றிவேல் மட்டும் சென்னையில் இருந்தார். ஏற்கெனவே, தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ கூறும்போது, ‘எங்களை அழைத்து பேசாதது ஏன்’ என்று பழனிசாமி தரப்பை வினவினார். இதை முன்னிட்டு பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் முதல்வர் பழனிசாமி தரப்பு இறங்கியது.

முதல்கட்டமாக நேற்று முன்தினம் இரவு, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மணியான இரு முக்கிய அமைச்சர்கள் அடையாறு வீட்டில் தினகரனை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், நேற்று சென்னையில் தங்கியிருந்த எம்எல்ஏ வெற்றிவேலை அழைத்த தினகரன், தற்போதைய நிலை குறித்து விவாதித்தார்.

இருப்பினும் ஒரு புறம் சமாதானம், மறுபுறம் சுற்றிவளைப்பு என்ற திட்டத்தை முதல்வர் பழனிசாமி அரசு வைத்துள்ளது. அதன்படிதான், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எந்த விடுதியிலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. அடுத்ததாக, அந்த எம்எல்ஏக்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம், அவர்களை வளைக்கவும் முதல்வர் பழனிசாமி தரப்பு முயற்சித்து வருகிறது. அதில் மேற்கண்ட முக்கிய அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் நேற்று அரியலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கூட பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. இதையே குதிரை பேரம் நடப்பதாக திவாகரன் உள்ளிட்டோர் குற்றச்சாட்டாக தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசுக்கு பெரும்பான்மை குறைவாக இருப்பதைக் குறிப்பிட்டு, பாதாளம் வரை பாயும் என்பது தெரியாதா உங்களுக்கு?’ என்று செய்தியாளர்களிடம் கேட்டதையும் இதில் பொருத்திப் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x