Last Updated : 23 Aug, 2017 06:13 PM

 

Published : 23 Aug 2017 06:13 PM
Last Updated : 23 Aug 2017 06:13 PM

சசிகலா சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சசிகலா தரப்பு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்ட விரோதமாக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி புகார் செய்தார். இதை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா, கடந்த 2014-ம் ஆண்டு நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்ட மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டு நால்வரையும் விடுதலை செய்தது.

இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீர்ப்பளித்தனர். அப்போது, “இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, விசாரணை காலத்தில் இறந்துவிட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் முடித்து வைக்கப்படுகிறது. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ஜெயலலிதாவுக்கு பினாமியாக செயல்பட்டதும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, குற்றவாளிகளை விடுவித்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

எனவே கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இந்திய தண்டனை சட்டம் 120 (பி), 109 ஆகிய பிரிவின் கீழும், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்காக ஊழல் தடுப்பு சட்டம் 13 (1) (ஈ), 13(2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. அரசு பதவியிலும், அதிகார பொறுப்பிலும் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. ஊழல் நாட்டையும், பொருளாதாரத்தையும், முன்னேற்றத்தையும் சீரழிக்க கூடியது” என தீர்ப்பளித்தனர். 

இதையடுத்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சீராய்வு மனு தாக்கல்

இந்நிலையில் கடந்த ஏப்ரலில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், “அரசு ஊழியரான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக நிரூபிக்கப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எங்களுக்கு (சசிகலா தரப்பு) தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது. அரசு ஊழியரான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, இவ்வழக்கின் தன்மை மாறிவிட்டது. மேலும் அரசு ஊழியர் அல்லாத எங்களை ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியாது. ஜெயலலிதாவைப் போல எங்களையும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

கடந்த மே 3-ம் தேதி இம்மனுவை பரிசீலணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மே 10-ம் தேதி வழக்கு எண் ஒதுக்கியது.

இந்நிலையில் கடந்த வாரம் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை 22-ம் தேதி விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அப்போது மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி சசிகலா தரப்பில் ஆஜராகி, “இவ்வழக்கில் பல வாதங்களை முன்வைக்க வேண்டியிருப்பதால் நீதிபதி சேம்பரில் சீராய்வு மனுவை விசாரிக்கக் கூடாது. சில எழுத்துப்பூர்வமான வாதங்களையும் முன்வைக்க விரும்புகிறோம். எனவே வழக்கமாக விசாரணை நடைபெறும் நீதிமன்ற அறையில் வழக்கை விசாரிக்க வேண்டும்” என கோரினார்.

தீர்ப்பில் பிழை இல்லை

இது தொடர்பாக நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மாலை 5 மணிக்கு வெளியிட்ட ஒரு பக்க தீர்ப்பில், “சசிகலா தரப்பின் சீராய்வு மனு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி புதன்கிழமை (நேற்று) எழுத்துப்பூர்வமான வாதத்தை முன் வைத்தார். இவ்வழக்கை நீதிமன்ற அறையில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம். சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒரு சிறு பிழையைக் கூட கண்டறிய முடியவில்லை. அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பின் மூலம் சசிகலா தரப்பின் 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x