Published : 23 Aug 2017 10:18 AM
Last Updated : 23 Aug 2017 10:18 AM

கோவை வண்ணத்துப்பூச்சி பூங்கா!- இப்ப வருமோ.. எப்ப வருமோ?

டந்த ஆட்சியில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முக்கொம்புவில் 9 கோடி ரூபாய் செலவில் வண்ணத்துப் பூச்சி பூங்கா ஒன்றை அமைத்துத் தந்தார் ஜெயலலிதா. அதேபோல் ஒரு பூங்காவை,கோவை ஆனைகட்டி - மாங்கரை பகுதியிலும் அமைக்க வனத்துறை வகுத்த திட்டம் அப்படியே கிடக்கிறது.

லட்சக் கணக்கில் வலம்

கோவை மாவட்டத்தின் வாளையாறு தொடங்கி சிறுமுகை வரை உள்ள பகுதியானது மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளால் சூழப்பட்டுள்ள பகுதியாகும். இங்கே, காட்டுயானை, காட்டுமாடுகள், புலி, சிறுத்தை, கரடி, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளும் பல்லாயிரக்கணக்கான பூச்சி வகைகளும் வசிக்கின்றன. அவற்றில் முக்கியமானவை பார்வையாளர்களின் கண்ணைப் பறிக்கும் வண்ணத்துப்பூச்சிகள். இங்கு நூற்றுக் கணக்கான வகைகளில் காணப்படும் இந்த, வண்ணத்துப்பூச்சிகள், ஜூன், ஜூலை மாதங்களில் நீலகிரி வனப் பகுதியில் வலசையில் இருக்கும். அதன் பிறகு அக்டோபர் தொடங்கி பிப்ரவரி வரைக்கும் இவை கோவை வனப் பகுதிக்கு வரும். குறிப்பாக, கோவை குற்றாலம், சாடிவயல், வெள்ளியங்கிரி மலை, மருதமலை, ஆனைகட்டி, மாங்கரை, காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இவை லட்சக் கணக்கில் வலம் வரும்.

இந்த வண்ணத்துப்பூச்சிகளைப் பாதுகாத்து கோவை வனப்பகுதியில் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக் கும் விதத்திலும், இவை பற்றி மாணவர்கள் படித்துக் கொள்ளும் வகையிலும், உயிர்ச்சூழல் மண்டலத்துக்கு வண்ணத்துப்பூச்சிகள் எப்படியெல்லாம் உதவுகின்றன என்பதை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் பொருட்டும் இப்பகுதியில் ஒரு வண்ணத்துப்பூச்சிப் பூங்கா அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, கோவை வனப்பகுதிக்கு வரும் வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து விதமான உயிரினங்கள் குறித்தும் கணக்கெடுக்கப் போவதாக கடந்த ஆண்டு வனத்துறை அறிவித்தது. ஆனால், கடந்த ஆண்டு வண்ணத்துப்பூச்சிகளின் வழக்கமான வலசை இல்லாமல் போனதால் இந்த முயற்சி தொடக்கத்திலேயே நின்றது.

வராத வண்ணத்துப்பூச்சிகள்

பொதுவாக, தென்மேற்குப் பருவமழை தொடங்கும் போது மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் இருந்து லட்சக்கணக்கில் பறக்கத் தொடங்கும் வண்ணத்துப்பூச்சிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடுகளைச் சென்றடையும். இனவிருத்திக்குப் பிறகு, வடகிழக்கு பருவமழைதொடங்கும்போது மீண்டும் புதிய பூச்சிகளின் கூட்டமாக கிழக்குத் தொடர்ச்சி மலைக்காட்டில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடையும். இது காலங்காலமாய் தொடர்ந்து நடந்துவரும் இயற்கை சார்ந்த ஒரு நிகழ்வு.

இதன்படி பார்த்தால் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கி நவம்பருக்குள் லட்சகணக்கான வண்ணத்துப்பூச்சிகள் மேட்டுப்பாளையத்தைக் கடந்து சென்றிருக்கவேண்டும். ஆனால், கடந்த ஆண்டு இந்த இடப்பெயர்ச்சியானது முறையாக நடைபெறவில்லை தவிர, இங்குள்ள கல்லார் பகுதியில் காணப்படும் அரிய வகை வண்ணத்துப்பூச்சிகளும் கடந்த முறை மிஸ்ஸிங். இதையெல்லாம் சரிசெய்து, வழக்கமான எண்ணிக்கையில் வண்ணத்துப்பூச்சிகளை இங்கே வரவைக்க வேண்டுமானால், கோவையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைவது அவசியம் என்கின்றனர் இது குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் சூழலியலாளர்கள்.

வரப்பிரசாதமாக அமையும்

இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “வண்ணத்துப் பூச்சிகளின் இடப்பெயர்வு மாறுபாடு இயற்கையின் சிதைவையும், பருவ நிலை மாறுபாட்டையும் காட்டுகிறது. ஆனைகட்டி, மாங்கரை பகுதியில் அறிவிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிப் பூங்கா வந்தால், அது மாணவர்களுக்கும் வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும்” என்றார்கள்.

வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைவது ஏன் தள்ளிப் போகிறது? என்று கோவை மண்டல வனக்காப்பாளர் ராமசுப்பிரமணியத்திடம் கேட்டோம். ”மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் உள்ள சிறுவாணி பகுதியில் பசுமைமாறாக் காடுகளும் ஈரப்பதம் மிக்க இலையுதிர்க்காடுகளும் நிறைய உள்ளன. வற்றாத தண்ணீரும் ஈரப்பதமான தட்பவெப்பமும் நிலவும் இந்தப் பகுதியில், வண்ணத்துப் பூச்சிகளை ஈர்க்கும் அரிய வகை தாவரங்கள் ஏராளம் உள்ளன.

இங்கு மட்டுமே 20 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. இவற்றுடன் பல்வேறு பகுதிகளிலிருந்து 100 வகையான வண்ணத்துப்பூச்சிகளையும் இங்கு கொண்டு வந்து வளர்க்கவும் திட்டமிருக்கிறது. அதற்கு முன்பாக, வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கும் தாவரங்களை இங்கு வளர்ப்பதுடன் வண்ணத்துப்பூச்சிகளுக்கான தட்பவெப்ப நிலையையும் செயற்கையாக உருவாக்க வேண்டும். இதற்காக இங்கே சில பகுதிகளை ஆய்வு செய்தபோது அவை குரங்குகள் அதிகமிருக்கும் பகுதியாக தெரியவந்தது.

எனவே, குரங்குகளால் சேதமடையாத வகையில் பூங்காவை அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுகள் முடிந்ததும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில்லாமல், கோவை குற்றாலத்திலுள்ள வன உயிரினங்கள் குறித்த கண்காட்சி மையத்திலும் வண்ணத்துப்பூச்சிகளுக்கான மாதிரி பூங்கா ஒன்றை அமைப்பது குறித்தும் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையோடு பேசிவருகிறோம்” என்று சொன்னார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x