Published : 21 Aug 2017 09:19 PM
Last Updated : 21 Aug 2017 09:19 PM

கூவத்தூரிலிருந்து வெளியேறி இருந்தால் பழனிசாமி முதல்வராக இருக்க முடியுமா?- தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ பேட்டி

நாங்கள் கூவத்தூரிலிருந்து வெளியேறி இருந்தால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்க முடியுமா? என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.

அதிமுக இரு அணிகள் இணைப்பு நடந்துள்ள நிலையில் அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5 பேர் தான் பொதுச் செயலாளராக முன்மொழிந்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேரும் அதை ஏற்றுக்கொண்டனர். இதே 5 நபர்கள் சசிகலா முதல்வராக வேண்டும் என்று முன்மொழிந்தனர்.பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுத்தவர்கள் இப்போது நீக்குவதாக அறிவிக்கின்றனர்.

சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டதால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொண்டோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ். அவருடனான அணிகள் இணைப்பை எப்படி இப்போது ஏற்றுக்கொள்ள முடியும்? இவ்வளவு வலுக்கட்டாயமாக ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்க வேண்டிய அவசியம் என்ன?

நாங்கள் கூவத்தூரில் இருந்து வெளியேறி இருந்தால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்க முடியுமா? 122 எம்.எல்.ஏக்கள் வாக்களித்து எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்தோம். அவர் முதல்வரானார். இப்போது எங்களின் கருத்துகளை கேட்காமல் எப்படி முடிவெடுக்கலாம். 10 எம்.எல்.ஏக்கள் உள்ள ஓபிஎஸ் அணியுடன் இணையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 25 எம்.எல்.ஏக்கள் பலம் உள்ள எங்கள் கருத்தைக் கேட்காதது ஏன்?

பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளருக்குதான் உள்ளது. அவருக்கு அடுத்து துணை பொதுச் செயலாளருக்கே அந்த அதிகாரம் உள்ளது.

ஆளுநர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சந்திக்க அனுமதி அளித்திருக்கிறார். 18 எம்.எல்.ஏக்களும் சென்று சந்திக்க உள்ளோம். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x