Published : 21 Aug 2017 11:49 AM
Last Updated : 21 Aug 2017 11:49 AM

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; சசிகலாவை நீக்க நடவடிக்கை

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற்றது. அணிகள் இணைப்பை ஓபிஎஸ் அறிவித்தார்.

தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.  பொதுக்குழுவைக் கூட்டிக் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இன்று (திங்கள்கிழமை) காலை முதலே அதிமுக தலைமை அலுவலகம், முதல்வர் இல்லம், க்ரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் ஆகியன பரபரப்பாக இருந்துவந்த நிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். இருவரும் நேரில் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொண்டனர்.

பின்னர் அணிகள் இணைப்பை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு: நிகழ்நேரப் பதிவு நிறைவுற்றது.

4.50 pm: மாஃபா பாண்டியராஜன் தமிழ் மொழித்துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

4.42 pm: தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

4.30 pm: பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநர் மாளிகை வந்தடைந்தனர்.

4.05 pm: பின்னர் எம்.ஜி.ஆர்., நினைவிடம், அண்ணா நினைவிடத்திலும் மலரஞ்சலி செலுத்தினர்.

3.55 pm: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

3.50 pm: அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என எம்.பி., வைத்திலிங்கம் அறிவித்தார். விரைவில் பொதுக்குழுவை கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என அவர் கூறினார்.

3.40 pm: பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எம்.சி. சம்பத்திடம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமவளம் துறை கூடுதலாக வழங்கப்படுகிறது.

3.30 pm: ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதி மற்றும் வீட்டு வசதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

3.15 pm: இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிரிகளை வீழ்த்துவோம் - முதல்வர் பழனிசாமி.

3.15 pm: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளார் - ஓ.பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளர் - எடப்பாடி பழனிசாமி; துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி. வழிகாட்டுக் குழுவில் 11 பேர் இடம்பெறுகின்றனர்.

3.10 pm: பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு அணிகளும் இணைந்துள்ளன- முதல்வர் பழனிசாமி.

3.05 pm: உலக அரசியல் அரங்கில் அதிமுக சரித்திரத்தை உருவாக்கியுள்ளது- ஓபிஎஸ்.

3.01 pm: தொண்டர்கள் விருப்பப்படி அணிகள் இணைப்பு நடைபெற்றது. இனி எங்களை யாராலும் பிரிக்க முடியாது. அணிகள் இணைப்பு நடந்ததால் என் மனப் பாரம் எல்லாம் இறங்கிவிட்டது- ஓபிஎஸ்.

3.00 pm: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன.

2.45 pm: முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேரில் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொண்டனர்.

2.25 pm: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் அணி வருகை.

2.20 pm:  முதல்வர் பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தடைந்தார். இதனால் கட்சி அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் மீண்டும் குவிந்தனர்.

2.00 pm:  அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி.

1.40 pm: அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் ஓபிஎஸ் பயணத்திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1.35 pm: முதல்வர் பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வரும் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

1.30 pm: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தடைந்தார்.

1.15 pm: டி.டி.வி.தினகரனால் சமீபத்தில் பதவி வழங்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மாதாவரம் மூர்த்தி, டி.கே.எம்.சின்னையா அவரது ஆதரவாளர் கரிகாலன் உள்ளிட்டோரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

12.55 pm: சூரிய கிரகணம் காரணமாக ஓ.பி.எஸ் வீட்டிலிருந்து கட்சி தலைமை அலுவலகத்துக்கு கிளம்புவதில் தாமதம் என ஓ.பி.எஸ் தரப்பில் தகவல்.

12.45 pm:  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

12.43 pm: அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தடைந்தனர்.

12.40 pm: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகல் 12.10 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்துக்கு கிளம்புவதாக இருந்த நிலையில் தற்போது அவர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

12-10 pm : சரியாக 1210 மணிக்கு வீட்டிலிருந்து கட்சி அலுவலகம் கிளம்புகிறார் ஓ.பி.எஸ் , வழியில் கோவிலில் பூரண கும்ப மரியாதை கொடுக்கப்படுகிறது. பின்னர் கட்சி அலுவலகம் சென்றடைகிறார்.

11.40 am: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் சென்னை வருகிறார்.

11.15 am: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவரும் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

11.10 am: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இருந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் புறப்பட்டார்.

11.00 am: அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் 16 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

10.15 am: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

10.0 am: அதிமுகவின் இரு அணிகள் இணைவதை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. போலீஸார் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு:

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், இன்று மாலை புதிய அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது. அவருக்கு நிதி மற்றும் வீட்டு வசதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சசிகலாவைப் பற்றி பேசாத ஓபிஎஸ், எடப்பாடி..

இணைப்பு நிகழ்ச்சியின்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஏதும் பேசவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x