Last Updated : 21 Aug, 2017 09:18 AM

 

Published : 21 Aug 2017 09:18 AM
Last Updated : 21 Aug 2017 09:18 AM

அதிமுக அரசை வீழ்த்த தயாராகும் திமுக

முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக அரசை வீழ்த்துவதற்கான முயற்சிகளை திமுக தொடங்கியுள்ளதாக கூறப்படு கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசிலும், அதிமுகவிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க் கொடி உயர்த்த, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கே.பழனிசாமி முதல்வரானார். அவரது அரசுக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவளித்து வருகின்றனர். 11 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்குப் பிறகு இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தன.

பாஜக மேலிடத் தலைவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஒதுக்கிவிட்டு பழனிசாமியும், ஓபிஎஸ்ஸூம் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். அமாவாசை தினமான இன்று (ஆகஸ்ட் 21) இரு அணிகளும் இணைவதற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக அரசை வீழ்த்துவதற்கான முயற்சிகளை திமுக தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை உறுதிப்படுத்துவதுபோல திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பழனிசாமி அரசு விரைவில் வீட்டுக்கு செல்வதே தமிழகத்துக்கு நல்லது என்பதால், அரசு ஊழியர்களுடன் இணைந்து இந்த அரசை ஜனநாயகரீதியில் வீழ்த்தி, அரசு ஊழியர்களையும், மக்களையும் காப்பாற்றும் பணியில் திமுக தீவிர கவனம் செலுத்தும்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி (திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1) 98 இடங்களில் வென்றது. திமுகவைவிட கூடுதலாக 1 சதவீத வாக்குகளையே அதிமுக பெற்றது. நூலிழை வித்தியாசத்தில் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது. இது அக்கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

எனவே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆட்சியமைக்க திமுக முயற்சிகள் மேற்கொள்ளும் எனக் கூறப்பட்டது. ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் திமுக மேற்கொள்ளவில்லை. “ஜனநாயக முறையில் மக்களைச் சந்தித்து ஆட்சியமைப்பதையே திமுக விரும்புகிறது. அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுத்து குறுக்கு வழியில் ஆட்சிமையக்க விரும்பவில்லை” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு வந்தார்.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இணக்கமான போக்கையே திமுக கடைபிடித்தது. ஆனால், இனியும் காத்திருக்காமல் ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் ஆயத்தமாகி வருவதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “அதிமுக எம்எல்ஏக்களை இழுத் தால் மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் ஸ்டாலின் அதனை விரும்பவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் திமுக வெற்றி பெறும் நிலை உள்ளது. எனவே, இதனைப் பயன்படுத்தி தேர்தல் வரும் சூழலை உருவாக்க வேண்டும் என்ற மூத்த நிர்வாகிகளின் கோரிக்கையை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் பழனிசாமி - ஓபிஎஸ் இணைந்து இரட்டை இலை சின்னத்தைப் பெற்று வலுவாகி விடவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதால் உறுதியாக இருக்கிறோம்'' என்றார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநரிடம் திமுக கோரிக்கை விடுக்கும் என்றும், அது ஏற்கப்படாத பட்சத்தில் அரசின் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத னால் அடுத்தடுத்த வாரங்களில் தமிழக அரசியல் மேலும் சூடு பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x