Published : 19 Aug 2017 10:34 AM
Last Updated : 19 Aug 2017 10:34 AM

‘வாஞ்சிநாதன்.. வாரிசு.. சர்ச்சை.. அந்தப் பேட்டிக்கு ஆதாரம் எதுவுமில்லை!’

கடந்த சுதந்திர தின இதழின் சிறப்புப் பக்கத்தில், வாஞ்சிநாதனின் பேரன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட திருச்சியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் அளித்திருந்த பேட்டி வெளியாகியிருந்தது.

அதைத் தொடர்ந்து, ‘வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாளுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. எனவே, வாஞ்சிநாதனுக்கு நேரடி வாரிசு என்று யாரும் இருக்க வாய்ப்பே இல்லை’ என்று மறுத்து இணையம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலரும் சூடாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர். ‘ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு சுமார் 3 வயதுதான். அவர் எப்படி வெள்ளை அரசாங்கத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக, வாஞ்சியார் மனைவி பொன்னம்மாளுக்கு அடைக்கலம் அளித்திருக்க முடியும்?’ என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

‘ஜெயகிருஷ்ணன் குறிப்பிட்டது முத்துராமலிங்கத் தேவரை அல்ல, அவரது தந்தை உக்கிரபாண்டியத் தேவரைத்தான்’ என்று ஜெயகிருஷ்ணன் கூறியதை மறுநாளே ’தி இந்து’வில் திருத்தமாக வெளியிட்டிருந்தோம். எனினும், ’வாஞ்சிநாதனின் வாரிசு என்று ஜெயகிருஷ்ணன் உரிமை கொண்டாடுவதற்கு அடிப்படை ஆதாரம் எதுவுமில்லை’ என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மூத்த எழுத்தாளரும் வரலாற்று ஆர்வலருமான பி.ஏ.கிருஷ்ணன், ’வாஞ்சிக்குக் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அவருக்குச் சந்ததியினரே கிடையாது. பிரிட்டிஷ் அரசு வாஞ்சியின் மனைவியைக் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று மின்னஞ்சல் அனுப்பியதோடு, ‘தி இந்து நாளிதழ் ஜெயகிருஷ்ணனின் வாரிசு கோரிக்கையை சரிபார்த்து வெளியிட்டிருக்க வேண்டாமா?’ என தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் நம்மைத் தொடர்பு கொண்ட வாஞ்சிநாதன் மனைவி பொன்னம்மாளின் தங்கை பேரனான எஸ்.ராமநாதன், ‘ஜெயகிருஷ்ணன் கூறியிருக்கும் தகவல்கள் உண்மையில்லை என்று எங்களால் உறுதியாகத் கூறமுடியும். எங்களது பெரிய பாட்டி பொன்னம்மாளுக்கு வாரிசு என்று யாரும் இல்லை. எனது பெரிய பாட்டி பொன்னம்மாள் அவர்கள் திருமணமாகி ஒரு ஆண்டுகூட கணவருடன் வாழவில்லை. கணவரை இழந்த பிறகு திருவனந்தபுரத்தில் எங்கள் குடும்பத்தோடே இருந்தார். எங்கள் குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தபோது அவரும் சென்னைக்கே வந்துவிட்டார். அதுமுதல் சென்னையிலேயே வசித்த பொன்னம்மாள் பாட்டி, நோய்வாய்ப்பட்டு, 1967-ல் ஜூலை முதல் தேதி அன்று, மேற்கு மாம்பலத்தில் உள்ள எங்களது வீட்டில்தான் இயற்கை எய்தினார்’ என்று தெரிவித்ததுடன், வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாளின் இறப்புச் சான்றிதழையும் நமக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

ஜெயகிருஷ்ணன் கூறிய தகவல்களைத்தான் அப்படியே வெளியிட்டிருந்தோமே அன்றி, குறிப்பிட்ட அந்தப் பேட்டியை வெளியிட்டதில் ‘தி இந்து’வுக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. வாஞ்சிநாதனின் குடும்பத்தார் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் எண்ணமும் நமக்கு இல்லை. இருப்பினும், பேட்டி விவரங்களை தீர விசாரித்து, சரிபார்த்த பின்பு வெளியிட்டிருக்க வேண்டும் என்ற விமர்சனத்தை ஏற்கிறோம். அத்துடன், தேவையற்ற சர்ச்சைகள் எழ காரணமாகிவிட்ட அந்தக் கட்டுரையை பிரசுரித்தமைக்கு வருந்துகிறோம்.

- ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x