Published : 18 Aug 2017 09:10 AM
Last Updated : 18 Aug 2017 09:10 AM

சசி கட்டுப்பாட்டில் ஜெ. இல்லம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் தோட்ட இல்லம் தற்போது வரை அவரது தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

டிடிவி தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் சில தினங்கள் மட்டும் போயஸ் இல்லத்துக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், தினகரனுக்கும் தீபக்குக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தீபக் போயஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் இருவருமே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவில்லை என அங்கு பணியில் உள்ள போலீஸார் தெரிவித்தனர்.

தனியார் பாதுகாப்பு

ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய சிலர் மட்டும் அவ்வப்போது வந்து செல்கின்றனர். போயஸ் இல்ல பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாவலர்கள் தொடர்ந்து ‘ஷிப்ட்’ அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

வீட்டின் பராமரிப்பை ஏற்கெனவே பணியாற்றியவர்களே கவனித்துக் கொள்கின்றனர். வீட்டின் நிர்வாகம், கட்டுப்பாடு முழுவதும் தற்போது வரை சசிகலா குடும்பத்தினரிடமே உள்ளது. வேதா இல்லத்தின் அருகில் ஜெயா டிவி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் இளவரசியின் மகன் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய, உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, பறிமுதல் செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்படவில்லை. போயஸ் தோட்டவீடு, ஜெயா டிவி அலுவலகம், நமது எம்ஜிஆர் பத்திரிகை ஆகிய அனைத்தும் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இப்போது வரை இயங்கி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x