Last Updated : 17 Aug, 2017 10:31 AM

 

Published : 17 Aug 2017 10:31 AM
Last Updated : 17 Aug 2017 10:31 AM

மதுக்கரை - வாளையாறு ரயில் பாதையில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க தெர்மல் சென்சார் கருவிகள் பொருத்தம்: ஒரு வாரத்தில் சோதனை முறையில் இயக்கப்படும்

கோவை மதுக்கரை வனச்சரகத்தில் பிரச்சினைக்குரிய ரயில்பாதையில் யானைகள் சிக்கி பலியாவதைத் தடுக்க 500 மீட்டரில் 3 இடங்களில் தெர்மல் சென்சார், கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்தில் இத்திட்டம் சோதனை முறையில் இயக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் யானைகள் ஊடுருவல் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று மதுக்கரை. கோவை - கேரள வனப்பகுதிகளுக்கு இடையேயான மதுக்கரை வனச்சரகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனிடையே உள்ள ரயில்பாதைகளில் தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் கோவை - கேரளம் வழியாக பயணிக்கின்றன.

இதனால், வனவிலங்குகள் ரயில் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு மதுக்கரை மகராஜ் யானையின் இறப்பைத் தொடர்ந்து, இந்த ரயில் பாதையில் தொடர்ந்து யானைகள் பலியாகி வருகின்றன. இதைத் தடுக்க பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகளும், கோவை மாவட்ட வனத்துறையும் பல கட்ட முயற்சிகளை எடுத்தனர்.

அவை அனைத்துமே தீர்வைத் தராத நிலையில் இறுதியாக, தெர்மல் சென்சார், தெர்மல் கேமராக்கள் மூலம் வனவிலங்குகள் நடமாட்டத்தை அறிந்து, அதற்கேற்ப ரயில்களை இயக்கும் தொழில்நுட்பம் இங்கு செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த 5 மாதங்களாக இதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மூன்று இடங்களில், வெப்ப உணரி தொழில்நுட்பத்திலான (தெர்மல் சென்சார்) உணரிக் கருவிகளை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள், இந்த முன்மாதிரி தொழில்நுட்பம் இன்னும் ஒருவார காலத்தில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

தெர்மல் கேமரா

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் சதீஷ் கூறும்போது, ‘கோவையில் மதுக்கரை வனச்சரகத்தில் மட்டுமே ரயில்பாதையில் யானைகள் பலியாகி வருவது பிரச்சினையாக இருந்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும், சோலார் முறையில் இயங்கக்கூடிய தெர்மல் சென்சார், தெர்மல் கேமராக்கள் மற்றும் அபாய ஒலி எழுப்பக்கூடிய சைரன், மின்விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட உள்ளன.

வன எல்லையை ஒட்டியுள்ள விபத்துப் பகுதியாக அறியப்பட்ட 500 மீட்டர் பகுதியில் இருபுறமும் தலா 3 இடங்களில், 6 மீட்டர், 7 மீட்டர் என இரு உயரங்களில் தெர்மல் சென்சார்கள் பொருத்தப் படுகின்றன. அதேபோல அங்கு வேட்டைத்தடுப்பு முகாமுக்கான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே பகல், இரவில் உணரக்கூடிய தெர்மல் கேமரா ஒன்று பொருத்தப்படுகிறது. இரவில் 200 மீட்டர், பகலில் 5 கி.மீட்டர் தொலைவில் உள்ளவற்றை இதன் மூலம் பார்க்க முடியும்.

விபத்துப்பகுதியான குறிப்பிட்ட 500 மீட்டருக்குள் யானைகள், வன விலங்குகள் வரும்போது, அவற்றை சென்சார்கள் உணரும். உடனடியாக விளக்குகள் எரிவதோடு, சைரன் ஒலிக்கும். சென்சார் பதிவுகள் அடிப்படையில் பாலக்காடு ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கும், வனத் துறையினருக்கும் செல்போனில் குறுஞ்செய்திகள் வந்துவிடும்.

சைரன் சத்தத்தைக் கேட்டு, அங்குள்ள தெர்மல் சென்சார் கேமரா மூலமாக வனவிலங்குகளை வேட்டைத்தடுப்பு முகாம் ஊழியர்கள் கண்காணித்து விரட்ட முடியும். இத்திட்டத்துக்கான அனைத்துப் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் இணைப்பு வழங்கும் பணி முடிந்து, ஒரு வாரத்தில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றார்.

கடந்த ஆண்டு யானைகள் இறப்பில் சிறுமுகை வனச்சரகம் முன்னணியில் இருந்தாலும், ரயில் விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மதுக்கரை சரகத்திலேயே அதிகம். ரயிலின் வேகம் குறைப்பு, அகழி அமைப்பு போன்ற முயற்சிகள் இருந்தாலும், இதுபோன்ற உயர்தொழில்நுட்ப முயற்சிகளே நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x